சென்னை: சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாததால், தலா, 50,000 ரூபாய் செலுத்தி, விருப்ப மனு கொடுத்த 60 பேரில், 25 பேர், தாங்கள் கட்டிய பணத்தை, கட்சியின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்திக் கொள்ளும்படி, கட்சியின் தலைவர் கமலுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு கட்டணமாக, 50,000 ரூபாய் செலுத்த வேண்டும் என, ம.நீ.ம., தலைமை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளை விட, ம.நீ.ம., விருப்ப மனு கட்டணம் மிக அதிகமாக இருந்தது. தங்களுக்கு எம்.எல்.ஏ., சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும், கட்சி தலைமை அறிவித்த கட்டணத்தை செலுத்தி விருப்ப மனு அளித்தனர்.
மொத்தம் 60 பேர் விருப்ப மனு அளித்தனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க., வலியுறுத்தியதால், கடைசி நிமிடத்தில் தங்கள் கட்சியின் தனித்துவத்தை காப்பாற்ற, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, கமல் அறிவித்தார்.
இதனால் விருப்ப மனு அளித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் சிலர், கட்சி தலைமையிடம், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளனர்.
இதையடுத்து, கமல் உத்தரவின்படி, கட்சியின் தலைமை நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம், ‘விருப்ப மனு செலுத்தியவர்கள், தாங்கள் செலுத்திய தொகையை, 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் வந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்’ என, அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 25 பேர் தங்களுக்கு, ‘விருப்ப மனு கட்டணத்திற்கான தொகையை திருப்பி தர வேண்டாம். அதை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என கூறி, கமலுக்கு ‘இ – மெயில்’ அனுப்பி உள்ளனர்.
மீதமுள்ள 35 பேரில், எத்தனை பேர் பணத்தை திரும்ப வாங்குகின்றனர் என்பது, ஓரிரு நாளில் தெரிய வரும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
