‘விரைவாக வெளியேறுங்கள்…’- இந்தியா கொடுத்த திடீர் அறிவிப்பு

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை.

war Photograph: (iran)

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் மேற்கொண்ட உரையாடல்களின் அடிப்படையிலும், ஈரான் மீது இன்று இரவு ஏவப்படவிருந்த அழிவு சக்தியை (தாக்குதலை) நிறுத்தி வைக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒப்புக்கொள்வதற்கு உட்பட்டு, ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.

இது இருதரப்புக்கும் பொருந்தக்கூடிய ஒரு போர்நிறுத்தமாக (CEASEFIRE) இருக்கும். இதைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாம் ஏற்கனவே நமது அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து அதைவிட அதிகமாகவே சாதித்துள்ளோம். மேலும் ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையில் நாம் இருக்கிறோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்.

இது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாத்தியமான அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறோம். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான கடந்த கால முரண்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட தீர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த இரண்டு வார கால அவகாசம் ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும் உதவும். அமெரிக்காவின் அதிபராகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனை தீர்வை நெருங்குவதை கௌரவமாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

211
war Photograph: (iran)

அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் இந்தியா ஒரு புதிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தத்தை பயன்படுத்தி ஈரானிலிருந்து விரைவாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்தியா, வெளிநாட்டு தூதரகம் பரிந்துரைத்த வழியாக மட்டுமே நாட்டினை கடக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட இத புதிய அறிவிப்பில், ஈரானில் தங்கியிருக்கும் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய விமானப் போக்குவரத்து மூலம் விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தூதரக தொடர்பு எண்கள் +989128109115, +989128109109; +989128109102; +989932179359  மற்றும் மின்னஞ்சல் முகவரியான [email protected] மூலமாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

Source link