விறுவிறு தேர்தல் களம்; தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திமுக வேட்பாளர் மதியழகன்!

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 234 தொகுதிகளில் 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி மீதமுள்ள 164 தொகுதிகளில் ஆளும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அந்த 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட செயலாளர் தே.மதியழகன் போட்டியிடுகிறார். முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, பர்கூர் தொகுதிக்குச் சென்று மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதோடு கூட்டணி கட்சிகளுடன் அவ்வப்போது ஆலோசனை தேர்தல் வியூகத்தை வகுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பர்கூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (31-03-26) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதியழகன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்தார். இந்த கூட்டத்தில், தேதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூர் கழக செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link