நாமக்கல்:”தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியான, ‘நெக்’ நிர்ணயிக்கும் விலையில் இருந்து வியாபாரிகள் குறைத்து கொள்முதல் செய்வதால், எட்டு நாட்களில் பண்ணையாளர்களுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது,” என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்க செயலர் சுந்தரராஜன் கூறியதாவது:
நாமக்கல் மண்டலத்தில் இருந்து, தினசரி, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. துபாய், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு, நாமக்கல்லில் இருந்து கப்பல்களில் நாளொன்றுக்கு, 80 லட்சம் முட்டைகள், ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே போர் காரணமாக, குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் நடத்திய தாக்குதலால் அங்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டன.
இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கன்டெய்னர்களில் ஏற்றப்பட்ட, 5 கோடி முட்டைகள் துறைமுகங்களிலும், கிடங்குகளிலும் தேக்கம்அடைந்துள்ளன.
இந்நிலையில், இந்த நாடுகளுக்கு அனுப்பிய முட்டைகள், சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால், ‘பண்ணைகளில் முட்டை தேக்கமில்லை’ என, பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், ‘நெக்’ விலையில் இருந்து, வியாபாரிகள் குறைத்து கொள்முதல் செய்வதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
