பொதுவாக போர் அல்லது பொருளாதார நெருக்கடி காலங்களில் தங்கம் ஒரு ‘பாதுகாப்பான புகலிடமாக’ கருதப்படும். ஆனால், தற்போதைய இஸ்ரேல் – ஈரான் போர் சூழலில் தங்கம் விலை, பிப்ரவரி இறுதியில் போர் துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 15 சதவீதம் வரை சரிந்துள்ளது.
ஜனவரியில் 5,600 டாலர் என உச்சத்தில் இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, தற்போது 4,470 டாலராக குறைந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 5.27 லட்சம் ரூபாயிலிருந்து, 4.20 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. இருப்பினும், சமீபத்திய சரிவுக்கு பிறகும், கடந்த ஆண்டை விட தங்கம் 50 சதவீதம் லாபத்தில் தான் உள்ளது.
தங்கத்தை விற்கும் நாடுகள் கடந்த 4 ஆண்டுகளில் அதிகளவில் தங்கம் வாங்கிய பல நாடுகளின் மத்திய வங்கிகள், இப்போது எரிசக்தி மற்றும் பாதுகாப்பு செலவுகளை ஈடுகட்ட தங்கத்தை விற்க தொடங்கியுள்ளன. விற்பதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை வாங்குவதையும் குறைத்து கொண்டு உள்ளன.
அதாவது, கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 27,000 கிலோ தங்கம் வாங்கிய மத்திய வங்கிகள், கடந்த ஜனவரியில் வெறும் 5,000 கிலோ மட்டுமே வாங்கியுள்ளன.
தங்கள் அவசரகால நிதி தேவைக்கு தங்கத்தை விற்றாலும், கடந்த ஆண்டின் விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது அவற்றுக்கு 50 சதவீத லாபம் கிடைத்துவருகிறது. இது, நாடுகளுக்கு மட்டுமின்றி, தனிநபர்கள், முதலீட்டாளர்களுக்கும் தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துவதாக உள்ளது.
