வில்வித்தை: இந்தியா அபாரம்

பாங்காக்: ஆசிய வில்வித்தையில் இந்தியாவின் ரஜத் சவுகான், பிரதமேஷ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ‘ஸ்டேஜ் 1’ தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. இதன் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் தகுதிச்சுற்றில் ‘நம்பர்-1’ இடம் பெற்ற இந்தியாவின் ரஜத் சவுகான், 148-147 என வங்கதேசத்தின் ஜஸ்வர்ஜோவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹர், 145-139 என சிங்கப்பூரின் டெங் ஊனை வீழ்த்தினார். இந்தியாவின் உதய் கம்போஜ், 147-139 என, தென் கொரியாவின் வீரர் சின் வெய்யை வென்றார். இந்தியாவின் ரிஷாப் யாதவ், 148-142 என தென் கொரியாவின் இவான் சினியவேவை வீழ்த்தினார்.

பெண்களுக்கான ரீகர்வ் பிரிவில் போட்டிகள் நடந்தன. தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ருமா பிஸ்வாஸ், 6-0 என தாய்லாந்தின் கன்யாநாத்தை வென்றார். இந்தியாவின் கீர்த்தி, 6-0 என ஆஸ்திரேலியாவின் மேகன் டெனியரை சாய்த்தார். ரிதி 7-1 என மங்கோலியாவின் பிஷிந்தியை வீழ்த்தினார். மூவரும், மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

Source link