கூடுதல் டிஜிபி தலைமையில் உயர் காவல் துறை அதிகாரிகள் 3 நாள் முகாமிட்டனர். 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 ஆய்வாளர்கள், 12 துணை ஆய்வாளர்கள், 150 போலீஸார் அடங்கிய 10 தனிப்படை அமைக்கப்பட்டது. உள்ளூர் சந்தேக நபர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வழக்குகளில் தொடர்புடையவர்கள், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பின்னணி மற்றும் தொடர்புகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத போதிலும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 98 சிசிடிவி கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டது. 2,524 செல்போன் எண்களின் 2,500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை அடிப்படையில் 50 பேர் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
இந்நிலையில், சம்பவ இடம் அருகே இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு, பின்னால் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலுள்ள காற்றாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது பார்த்தீபனூரில் திருடப்பட்டதும் தெரியவந்தது.
