விழுப்புரம்: ”எதிர்காலத்தில் மாற்று அரசியலை படைப்பேன்,” என த.வா.க., தலைவர் வேல்முருகன் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது: த.வா.க., கடலுார், விழுப்புரம் மாவட்ட கட்சி என்று கூறினார்கள். ஆனால், இன்று 38 மாவட்டங்களில் த.வா.க., உள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். த.வா.கா., வேல்முருகன் நம்முடன் இருந்தால், மிகப்பெரிய குடைச்சலாக இருப்பான் என கருதி கேட்ட இடங்களை தர மறுத்தனர்.
ஒரு தொகுதி வாங்கிக்கொள்ளுமாறு கூறினர். நாங்கள் கொடுப்பது சீட் இல்லை, எம்.எம்.ஏ., பதவி என்றனர். உங்கள் சீட்டும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்று வந்துவிட்டேன்.
எங்களுடன் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகள் கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு 50 தொகுதிகள் கொடுத்துள்ளோம். பயம் என்பது எங்கள் பரம்பரைக்கும் கிடையாது. மிரட்டி பார்ப்பது, உருட்டி பார்ப்பது வேண்டாம். பா.ம.க., ராமதாசை விட நீங்கள் பெரியவர்களா. அவரை எதிர்த்து உருவாக்கிய கட்சி தான் இது.
பனையூர் பங்களா கதவை திறந்து வைத்து, எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று எல்லாம் நாங்கள் கூறவில்லை. ஆனால், எங்களுடன் 40 கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளது.
எதிர்காலத்தில் மாற்று அரசியலை படைப்பேன். இன்று சிலர் நேரடியாக முதல்வர் சீட்டு வேண்டும் என கூறுகின்றனர். ஒரு கூட்டம் பின்னால் வருவதால், உடனே முதல்வர் கனவு வருமா. ராஜ ராஜ சோழனின் நேரடி வாரிசு நான். ராமதாஸ் நிலைமையை நினைத்தால் வேதனையாக உள்ளது. ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்று சேர வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் பேசினார்.
