விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல்

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல் தீர்ப்பளிக்கப்படும் என, விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2006 – 2011ல், தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பொன்முடி இருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், விதிகளை மீறி மண் எடுத்ததில், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன், லோகநாதன் உள்ளிட்ட எட்டு பேர் மீது, 2012ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபரில் முடிந்தது. அரசு தரப்பில் 182 ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 26 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜ மகேந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவர் மட்டும் ஆஜராகினர். பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் தரப்பு வக்கீல்கள், அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் இறுதியாக வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மணிமொழி, வழக்கை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிட தடை? சட்டசபை தேர்தலில் பொன்முடி போட்டியிட, தி.மு.க., தலைமை தடை விதித்துள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. திருக்கோவிலுார் தொகுதியில் இரண்டு முறை வென்ற பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்த சர்ச்சை பேச்சால், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தார். அதில் இருந்தே, அவருக்கான முக்கியத்துவத்தை கட்சி தலைமை தரவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். இந்நிலையில், ‘சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வேண்டாம்’ என, அவரிடம் கட்சித் தலைமை கூறியதாக கூறப்படுகிறது. எனினும், அவரது மகன் கவுதமசிகாமணிக்கு பச்சைக்கொடி காட்டியதால், கடந்த 27ம் தேதி கவுதமசிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்தார். பொன்முடி விருப்ப மனு அளிக்காமல், அவரது மகன் மனு அளித்த பின்னரே, கட்சித் தலைமை தடை விதித்த விபரம் வெளிச்சத்துக்கு வந்தது. ‘முன்னணி தலைவரான பொன்முடியை அரசியலில் இருந்து ஓரங்கட்ட, தி.மு.க., தலைமை நினைப்பது சரியல்ல’ என, அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Source link