பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில், விவசாயிகளை சந்தித்து மத்திய அரசு திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய, தொகுதிக்கு தலா 100 பேர் அடங்கிய குழுவை அக்கட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீடு உட்பட பல்வேறு திட்டங்களால், விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களால், தமிழகத்தில் உள்ள பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றுஉள்ளனர். ஆனால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக, தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.
எனவே, ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில், விவசாய அணியை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் 27 தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஒரு தொகுதிக்கு, 100 பேர் அடங்கிய குழுவாக சென்று, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாய கூட்டமைப்பினர் உள்ளிட்டோரை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி, ஆதரவு திரட்ட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
