விவசாயி மீது துப்பாக்கிச் சூடு சம்பவம்; யார் இந்த எஸ்.ஐ இசக்கி ராஜா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் 32 வயதான மணிகண்டன், பனையேறும் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா போலீசாருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக தனக்கு புகார் வந்திருப்பதாகக் கூறி, மணிகண்டன் மற்றும் அவரது தந்தை பெருமாள் சேட் ஆகியோரை அழைத்துக்கொண்டு பனை மரம் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் மரத்தில் இருக்கும் பனையில் என்ன இருக்கிறது என்று கூறி, மேலே ஏறி அதனை எடுக்கச் சொல்லியுள்ளார். அதனால் மணிகண்டன் மரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த மணிகண்டனின் அண்ணன் மகள் 17 வயதான சிறுமியிடம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தரக்குறைவாக    பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே இறங்கி இசக்கி ராஜாவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது அங்கிருந்த சிறுமியையும் இசக்கி ராஜா கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக மணிகண்டன் இசக்கி ராஜாவைத் தாக்க முயன்றதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இசக்கி ராஜா காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தனது துப்பாக்கியால் மணிகண்டனை 4 முறை சுட்டுள்ளார். அதில், இரண்டு குண்டுகள் மணிகண்டனின் காலில் பாய்ந்து அங்கேயே சரிந்துள்ளார். அதன்பிறகு காயமடைந்த மணிகண்டன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அத்துமீறி நடந்துகொண்ட சப் இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆலங்குளத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், “யார் இவருக்கு சுடுவதற்கு உத்தரவு கொடுத்தது? ஒரு சிறுமியிடம்  தரைகுறைவாக எப்படி பேசலாம்?” என்று பல்வேறு கேள்விகளையும் இசக்கி ராஜாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். போராட்டம் தீவிரமானதால், ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டம் கைவிடப்படும் என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறினர். அதன்பிறகு மணிகண்டன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ரவுடிகளை எச்சரித்து ஆடியோ வெளியிட்டதன் மூலம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். ரவுடிகளுக்கு எதிராகப் பேசிய இசக்கி ராஜாவுக்கு ஆரம்பத்தில் சில ஆதரவுகள் கிளம்பின. ஆனால், அந்த இமேஜைப் பயன்படுத்தி பின்னாட்களில் இசக்கி ராஜா பணியின் போது விசாரணை என்ற பெயரில் அடித்து உதைப்பது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய இசக்கி ராஜா, நீராவி முருகன் என்பவரை என்கவுண்டர் செய்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது அப்பாவி விவசாயி மணிகண்டனை வேண்டுமென்றே கொல்ல முயற்சி செய்ததாகக் கூறி எஸ்.ஐ. இசக்கி ராஜா இந்தக் கோரத்தை அரங்கேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் சில காவல்துறை அதிகாரிகள் காக்கிச்சட்டை அணிந்துகொண்டால் ஏதோ நாம்தான் கடவுள் என்ற எண்ணத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சிங்கம், சாமி போன்ற சினிமா படங்களில் வரும் போலீஸ் ஹீரோக்களுக்கு நிகராக தங்களை “மாஸ் போலீஸ்” என்று காட்டிக்கொள்ளும் போக்கு, காவல்துறை அதிகாரிகளிடம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் கெத்து காட்டும் வகையில் ரீல்களைப் பதிவிட்டு தங்களுக்குத் தாங்களே மார்க்கெட்டிங் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

எளிய மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் சில அதிகாரிகள், அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சாதாரண மக்களை அடித்து உதைத்தல், உடல் ரீதியான வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. காவல்துறை என்பது மக்களின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை எதிர்பார்ப்பு. ஆனால், சில அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக, பொதுமக்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இத்தகைய செயல்கள் தொடர்ந்தால், சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் வார்த்தை அளவிலேயே நின்றுவிடும். மனித உரிமைகளை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான காவலர்களை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் குரலாக இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

Source link