டில்லியில் உள்ள தேர்தல் ஆணைய விவகாரங்களை ரிப்போர்ட் செய்வது என்பது சற்று கடினமான விஷயம். ஆணையத்திற்குள் என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியாது. ஆணையத்தின் பத்திரிகை தொடர்பாளர் என்ன சொல்கிறாரோ, அதுதான் அதிகாரபூர்வமான செய்தியாக வெளியே வரும். அதையும் மீறி சில விஷயங்கள் வெளியே கசிந்து வந்து விடும். அதற்கு காரணம், சில நிருபர்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலருக்கு நன்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
சிலர் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். இப்படித்தான் செய்திகள் கசிந்து வெளியாகும். சில செய்திகள் வெளியே வர வேண்டும்; ஆனால் யார் சொன்னார்கள் என்பது தெரியக்கூடாது என நினைத்து அதிகாரிகள் சிலர் தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துவிடுவார்கள். அப்படியும் சில அதிரடி செய்திகள் வெளியாகும். எப்படி இந்த செய்தி வெளியானது என தலைமை தேர்தல் ஆணையர் விசாரணை நடத்துவார். முடிவாக யார் செய்தியை கசியவிட்டனர் என்கிற தகவல் இந்த விசாரணையில் வெளிவராது.
ஆணையமும் உச்ச நீதிமன்றமும்
இப்போது தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த திட்டத்தை தடை செய்ய மாட்டோம் என நீதிபதிகள் உறுதியாக சொல்லிவிட்டனர். அதே சமயம் ஒரு சில திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர். நான் சொல்லப்போகும் விஷயம் பல ஆண்டுக்கு முன் நடந்தது.
அப்போது தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்யும் கட்சிகள் வீடியோக்களை வெளியிடும். இந்த வீடியோக்களை கட்சிகள் தங்கள் இஷ்டப்படி பிரசாரத்தின் போது வெளியிட்டால் பல பிரச்னைகள் வரும். எனவே இதற்கென சில வரம்புகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் எனக்கு பிரச்னை ஆரம்பித்தது
பூஜைக்கு வாருங்கள்
அப்போது தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவருடன் எனக்கு நல்ல பழக்கம். என்னுடனும், ஆங்கில நாளிதழ் நிருபரான நண்பருடனும் நன்றாக பேசுவார். பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அவருடைய டில்லி வீட்டில் ஒரு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள என்னையும் நண்பரையும் அழைத்தார். நாங்களும் அதில் கலந்து கொண்டோம். டில்லியில் அதிகாரத்தில் உள்ள சிலரும் இந்த பூஜைக்கு வந்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து அவருடைய வீட்டிலேயே சாப்பாடு. இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். தலைமை தேர்தல் ஆணையருக்கான அரசு பங்களா பெரியது. அதில் வீட்டின் முன்புறமும் புல்வெளி உண்டு. அங்குதான் சாப்பாடு.
ஆணையத்தின் நிலை என்ன?
தலைமை தேர்தல் ஆணையரும் எங்களுடனே சாப்பிட்டார். கமிஷனின் பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கு பற்றி பேச்சு திரும்பியது. ”எங்கள் பதில் என்ன என்பது குறித்து கமிஷனின் அட்வகேட் சீனியர் வக்கீல் கே.கே.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்திவிட்டேன். அதற்கான பதில் ஏறக்குறைய தயாராகிவிட்டது,” என பதில் சொன்னார் தலைமை தேர்தல் ஆணையர்.
இதோடு பேச்சை நிறுத்தியிருக்கலாம்; எந்த பிரச்னையும் வந்திருக்காது. ஆனால், நாம் தான் செய்தியாளர் ஆயிற்றே! “என்ன பதில் தரப்போகிறீர்கள்” என கேட்டேன். உடனே அவர் அதைப் பற்றி விவரமாக விளக்கினார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கமிட்டியை தேர்தல் ஆணையம் அமைக்க உள்ளது. கட்சிகள் தங்கள் பிரசார வீடியோக்களை இந்த கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதில் பிரச்னை எதுவும் இல்லை என்றால் கமிஷன் அனுமதி அளிக்கும்.
அதன் பின் அந்த வீடியோவை பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் எங்கள் பதில். அபிடவிட் தயாராகிவிட்டது என்றார். அத்தோடு அந்த கமிட்டியில் யார் யார் இருப்பார்கள் என்பதையும் சொன்னார். உடனே என் மனதிற்குள், ‘எப்படி இதை செய்தியாக போடுவது’ என திட்டம் தயாரானது.
போடலாமா, வேண்டாமா?
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நானும் நண்பரும் வெளியே வந்தோம். “சார். இது அருமையான நியூஸ். யாருக்கும் தெரியாது. நான் இதை செய்தியாக்கினால் நமக்கான எக்ஸ்குளூசிவ் ஆக இருக்கும்…,” என்றேன். “அவர் நம்மிடம் இதை ஒரு நண்பராக பகிர்ந்து கொண்டுள்ளார்… எப்படி இதை செய்தியாக்க முடியும்,” என்றார் ஆங்கில நாளிதழ் நிருபரான நண்பர். “நீங்கள் சொல்வது சரி.
இது ஆப் தி ரிகார்ட்… இதைப் பற்றி எழுதக் கூடாது என அவர் சொல்லவே இல்லையே,” என்றேன், நான். ஒரு கணம் குழம்பினார் நண்பர். “உண்மைதான். செய்தியாக்க வேண்டாம் என்றால் அதை அவர் நம்மிடம் சொல்லியிருக்கலாம்,” என்று அவரும் கூறினார். உடனே இருவரும் எப்படி செய்தி போடலாம் என விலாவாரியாக ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தோம்.
Flash News
அன்று ஞாயிற்றுக்கிழமை. எனக்கு விடுமுறை. அலுவலகத்தின் நியூஸ் டெஸ்க்கிற்கு போன் செய்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் விடுமுறையில்தான் இருப்பார்கள். இருப்பினும் ஒரு நிருபர் மட்டும் பணியில் இருப்பார். ஏதாவது முக்கிய செய்தி என்றால் அவர்தான் சேகரிக்க வேண்டும். அன்று ஷிப்டில் இருந்தவர் மனு ஷர்மா என்கிற இளம் பெண் நிருபர். அவர் போனை எடுத்தார். தேர்தல் ஆணையம் அபிடவிட் தொடர்பான முக்கிய செய்தி உள்ளது. அதை முழுவதுமாக எழுதிக் கொள்ள முடியுமா என கேட்டேன். ”நிச்சயமாக சார், அருமையான செய்தியாக உள்ளதே,” என சந்தோஷப்பட்டார் மனு ஷர்மா.
இந்த சம்பவம் நடைபெற்றபோது வாட்ஸ் அப் இல்லை; இப்போதுள்ளது போல ஸ்மார்ட் போன்களும் இல்லை. வீட்டிற்கு போய் கம்ப்யூட்டரில் செய்தியை டைப் செய்து மெயில் செய்ய வேண்டும். அவ்வளவு நேரம் இல்லை. எனவே முழு செய்தியையும் அவருக்கு போனில் ‘டிக்டேட்’ செய்தேன். அவர் அதை அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டார். பிறகு அதில் உள்ள சந்தேகங்களை என்னிடம் கேட்டு முழு செய்தியையும் எழுதிவிட்டார். பின்னர் இது வீடியோ எடிட் செய்யப்பட்டு எங்கள் டிவியில் முக்கிய செய்தியாக வெளியானது.
உன்னிடம் இனிமேல் பேச மாட்டேன்
வீட்டிற்கு வந்து இரவு சாப்பாட்டிற்காக உட்கார்ந்த போது போன் அடித்தது. தலைமை தேர்தல் ஆணையர்தான் கூப்பிட்டார். எதற்காக போன் செய்கிறார்? மொபைல்போனை எடுத்து, ‘ஹலோ’ என்றேன். “ வைத்தியநாதன். நீங்கள் இப்படி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டீர்கள்…,” என்றார், அவர். “என்ன சொல்கிறீர்கள் சார்..எனக்கு புரியவில்லை…,” என்றேன், நான்.
“சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் என்ன அபிடவிட் தாக்கல் செய்யப் போகிறோம் என உங்களிடம் சொன்னேன். அதை எப்படி நீங்கள் நியூஸாக போடலாம்,” என்ற கேள்வி எழுப்பிய அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. “ சார்… அதை செய்தியாக போட வேண்டாம்… அது ஆப் தி ரிகார்ட் என எதுவுமே நீங்கள் சொல்லவில்லையே… அதனால்தான் அதை செய்தியாக வெளியிட்டேன்,” என்றேன், நான்.
“செய்தியை போடுவதற்கு முன் ஒரு வார்த்தை என்னிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அபிடவிட்டை நீதிபதிகள் படிப்பதற்கு முன் எப்படி என்.டி.டி.வியில் வந்தது என கே.கே.வி., (சீனியர் அட்வகேட் கே.கே.வேணுகோபால். பின்னாளில் இவர் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பதவி வகித்தவர். மிகவும் சீனியர். நீதிபதிகள் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்) என்னிடம் கோபப்பட்டார்,” என்றார் தலைமை தேர்தல் ஆணையர்.
“சார், இப்படி அபிடவிட் செய்தியாக வருவது ஒன்றும் புதிதல்ல. பல முறை இப்படி செய்தி போட்டிருக்கிறோமே,” என்று சமாளிக்க முயற்சித்தேன், நான்.
“ ஐ டோண்ட் வாண்ட் யுவர் ரீசன்ஸ். இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன்,” என சொல்லி போனை வைத்துவிட்டார். இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி, ‘என்ன விஷயம்’ என கேட்க, விளக்கினேன். “ பத்திரிகையாளர்னா என்ன வேணுமானாலும் எழுதலாமா, அவர் சொல்வதும் சரிதானே,” என தலைமை தேர்தல் ஆணையருக்கு பரிந்து பேசினார்.
உறவு சரியானது
மீண்டும் போன் அடித்தது. இந்த முறை ஆங்கில நாளிதழ் நண்பர். தலைமை தேர்தல் ஆணையர் எனக்கு போன் செய்ததை சொன்னேன். “எனக்கும் அவர் போன் செய்தார். நீயும் நியூஸ் போடுகிறாயா என கேட்டார். ஆமாம் என்றேன். தயவு செய்து போடாதே என்றார். ஏற்கெனவே என்.டி.டி.வி.,யில் செய்தி வந்துவிட்டது. நான் போடாவிட்டாலும் எங்கள் செய்தி ஆசிரியர் அந்த செய்தி நாளை பிரசுரம் ஆக வேண்டும் என சொல்லிவிட்டார். எனவே நான் செய்தி அனுப்பிவிட்டேன் என அவரிடம் சொன்னேன்… என்னிடமும் கோபமாகத்தான் இருந்தார்,” என்றார் அந்த நண்பர்.
“உங்களிடம் பேச மாட்டேன் என சொன்னாரா,” என்று கேட்டேன். “அப்படி எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவர் குரலில் கோபம் தெரிந்தது,” என்றார், நண்பர். என் செய்தி வெளியானதும் மற்ற சேனல்கள் தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அவரோ, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது’ என சொல்லிவிட்டார். இந்த நிகழ்வுக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையர் நான் போன் செய்தால் எடுப்பதில்லை. இப்படி சுமார் 6 மாதங்கள் ஓடின. பிறகு எங்கள் உறவு சரியானது. அவர் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இப்போதும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.
கணவன்- மனைவி இடையே சண்டை வந்தால் அது ஒரு சில மணி நேரமோ அல்லது ஒரு சில நாட்களோ தான். பிறகு ஒன்றாகிவிடுவார்கள். அதைப் போலத்தான் பத்திரிகையாளர்- அரசியல்வாதி அல்லது அதிகாரிகள் சண்டை. காரணம் இருவருக்குமே மற்றவர்களுடைய உறவு அவசியம். இந்த விவகாரத்திற்கு பிறகு எந்த முக்கிய பிரமுகரிடம் பேசினாலும், ‘இதை செய்தியாக போடலாமா’ என கேட்பதை வழக்கமாக மாற்றிக் கொண்டேன். அனுபவத்தை மிஞ்சிய ஆசிரியர் உண்டோ!
– அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: va****@*******ar.in
இந்த கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி பிப்.,19ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.
