வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம்; நானும் தருவேன் என்கிறார் சீமான்

காரைக்குடி: ”வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என காரைக்குடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

காரைக்குடியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் சீமான், தேவர் சிலை அருகே நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், வீட்டிற்கு ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன். கேட்பதற்கு இனிக்கிறதா . இதுதான் காதில் தேன் ஊற்றுவது. நீ எப்படி தர முடியும் என்று என்னிடம் கேட்க முடியுமா. மற்றவர்கள் எப்படி ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுப்பார்களோ, சிலிண்டர் கொடுப்பார்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன்.

மதுக்கடையை மூடுவேன், நல்ல கல்வி தருவேன், வேலை தருகிறேன் என்று கூற மாட்டார்கள். வேலையில்லையா ரூ. 4 ஆயிரம் தருகிறேன். படிப்பதற்கு ரூ.20 லட்சம் கல்விக்கடன் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். அதற்கு சிறந்த கல்வி நிலையத்தை ஏற்படுத்தி தர முடியும். மதுக்கடையை மூடாமல் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.

நான் ஆட்சிக்கு வந்ததும், பொது இடங்கள், தவிர மற்ற வணிக வளாகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தமிழில் தான் பெயர் இருக்க வேண்டும். அனைவரும் துாய தமிழில் பேச வேண்டும். டில்லியில் சிறப்பான ஆட்சி மூலம் சிறந்த கல்வியை வழங்கிய முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது சாராய ஊழல் என்று கூறி நல்லவர்களை வரவிடாமல் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Source link