வெடிகுண்டு மிரட்டல் டில்லி மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிப்பு வாகன சோதனைக்கு கூடுதல் சாவடிகள் அமைப்பு

புதுடில்லி: வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, டில்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி தலைமைச் செயலகம், டில்லி சட்டசபை, ராணுவ பள்ளி, செங்கோட்டை மற்றும் இரண்டு பள்ளிகள் உட்பட பல இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக, ‘இ-மெயில்’ வந்தது. அந்த இ-மெயிலில், ‘டில்லி பனேகா காலிஸ்தான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இ-மெயில்’ மேலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் டில்லி ராணுவப் பள்ளி, செங்கோட்டை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடிக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ், வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்ப நாய் படை, தடயவியல் துறை உள்ளிட்டோர் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த இடங்களில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

மிரட்டல் விடுத்து வந்திருந்த, ‘இ-மெயில்’ அனுப்பியவரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற இ-மெயில் அனுப்ப, குற்றவாளிகள் வி.பி.என்., எனப்படும் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என சைபர் கிரைம் போலீசார் கூறினர்.

கண்காணிப்பு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, டில்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம், முக்கிய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், செங்கோட்டை உள்ளிட்ட வரலாற்று நினைவிடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி மாநகர் முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

செங்கோட்டை, டில்லி தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்புப் படை மற்றும் மோப்ப நாய் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் இடைவிடாமல் கண்காணிக்கப் படுகின்றன.

Source link