இம்பால்;மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வெடிகுண்டு வீச்சுக்கு இரு குழந்தைகள் பலியானதை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. ஊரடங்கு உத்தரவு, இணையதள சேவை துண்டிப்பால் பதற்றம் தணிந்து தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 மே மாதம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்டி இனத்தவர் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் கூகி இனத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்ததில் 260 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரங் டிரோங்லோபி பகுதியில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் ஒரு கும்பல் குண்டுகளை வீசியதில் நேற்று முன்தினம் இரு குழந்தைகள் பலியாகினர். அவர்களது தாய் காயமடைந்தார்.
இதை தொடர்ந்து மாவட்டம் முழுதும் வன்முறை வெடித்தது. குழந்தைகளை குண்டு வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அப்போது சி.ஆர்.பி.எப்., முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 400 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இரு ஆயில் டேங்கர்களை தீவைத்து கொளுத்தியும், தற்காலிக போலீஸ் முகாம்களை சூறையாடியும், போக்குவரத்தை நிறுத்தியும் வன்முறையாளர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
இதனால் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், பிஷ்ணுபூர், தவ்பால், காக்சிங் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இணைய சேவையும் முடக்கப்பட்டதால் நேற்று எந்த வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை. மாநிலத்தில் பதற்றமான நிலமை நிலவினாலும் தற்போது அமைகியான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் தற்போதை நிலமை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் கேம்சந்த் சிங் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதையடுத்து தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கேம்சந்த் சிங், ”வெடிகுண்டு வீச்சு குறித்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.
