வென்றது மாணவர் போராட்டம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா – போராட்ட களத்தில் வெற்றி முழக்கம் – student protest triumphs as dharmendra pradhan resigns victory cheers erupt at protest sites

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் வலுத்த மாணவர் போராட்டங்களுக்கிடையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வெற்றிக் முழக்கமிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பல மாநிலங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சமூக ஊடகங்களிலும் மாணவர்களுக்கு ஆதரவாக பரவலான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்குஅரசியல் மற்றும் நிர்வாக ரீதியான பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திய மாணவர்கள், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் முக்கிய முழக்கமாக மாறியது.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் கவனம் பெற்றதுடன், மாணவர் போராட்டங்களுக்கு மேலும் வேகம் சேர்த்தது.

ராஜினாமா அறிவிப்பு

இந்த சூழலில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீட் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், கல்வித் துறையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

போராட்டக் களத்தில் கொண்டாட்டம்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த தகவல் வெளியானதும், பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகக் கோஷங்களைஎழுப்பி வெற்றியை கொண்டாடினர். இந்த ராஜினாமா மாணவர் போராட்டத்தின் முக்கிய வெற்றியாகக் கருதப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடரும் என்றும், அதற்கான போராட்டமும் அடுத்த கட்டத்தில் மேலும் தீவிரமாக நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Source link