தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 அன்றும், தமிழ்நாட்டிற்கு வருகின்ற ஏப்ரல் 23 அன்றும் மேற்குவங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு தேதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
குறிப்பாக கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, மூன்று கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 23ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் சொத்து விவரத்தை குறிப்பிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு இளம்பெண் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பு விவரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா சட்டமன்றத் தேர்தலில் எட்டுமானூர் தொகுதியில், ஆஷ்னா தம்பி என்ற 26 வயது இளம்பெண் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வேட்புமனுவில் தனது கையில் ரூ.40 இருப்பதாகவும் வங்கிக் கணக்கில் ரூ.44 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக அவரின் சொத்து மதிப்பு ரூ.84 என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ள இவர், இடதுசாரி சிந்தாந்தம் கொண்ட கட்சியான சோஷலிஸ்ட் யூனிடி செண்டர் ஆஃப் இந்தியா என்ற கட்சி சார்பாக போட்டியிடுகிறார். வேட்பாளராக போட்டியிட தேவையான டெபாசிட் தொகையை கட்சியினர் நிதி திரட்டி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
