வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க அனுமதி மறுப்பு- அரசாணை வெளியிடாத அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் – ttv dhinakaran condemns tvk govet for denial permission disabilitie persons to travel under vettri payanam scheme

அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கும் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் துணையாளர் ஒருவரையும் அனுமதிக்கக் கோரி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினகரன் அறிக்கை

பெண்கள் மற்றும் திருநர்களைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தும், இதுவரை உரிய அரசாணை பிறப்பிக்கப்படாததால், பேருந்து நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகளைப் பயணிக்க அனுமதி மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அரசின் அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் இடையிலான இந்த முரண்பாடு, தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

வெறும் ரீல்ஸ் கன்டென்ட்டுக்காக அவசரகதியில் அறிவிப்புகளை வெளியிடுவதும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அரசாணைகளைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவதும் தவெக அரசின் வாடிக்கையாகிவிட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் சீர்கெட்டு வருகிறது.

எனவே, சட்டமன்றத்தில் அறிவித்ததை நிறைவேற்றும் வகையில், வெற்றிப் பயணம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் துணையாளர் ஒருவரும் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதிக்கும் வகையில் உரிய அரசாணையை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

Source link