தனிநபர் வருமான வரி தாக்கல் என்பது, தற்போதைய ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31க்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா? அதேபோல், திருத்தப்பட்ட ஐ.டி., படிவத்தை தாக்கல் செய்யும் தேதியும் டிசம்பர் 31ல் இருந்து மார்ச் 31க்கு நகர்த்தப்பட்டுள்ளதா?- துரைபாண்டியன்,
மதுரை. ஜூலை 31லிருந்து ஆகஸ்ட் 31க்கு அனைத்து தனிநபர்களுக்கும் நீட்டிக்கப்படவில்லை. மாதச் சம்பளம் வாங்குவோர், அதாவது, ஐ.டி.ஆர்.,- 1 மற்றும் ஐ.டி.ஆர்., -2 தாக்கல் செய்பவர்கள், வழக்கம்போல் ஜூலை 31க்குள் தான் தாக்கல் செய்ய வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
தணிக்கை தேவைப்படாத சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு மட்டும் காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், வருமான வரிக் கணக்கில் ஏதேனும் பிழை இருந்தால், அதைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் இருந்தது. அதில் மாறுதல் கொண்டு வரப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிந்த பிறகு வரும் மார்ச் 31 வரை, திருத்தப்பட்ட கணக்கைத் தாக்கல் செய்யலாம்.
ஆனால் ஒரு விஷயம். டிசம்பர் 31ஐ தாண்டி மார்ச் 31க்குள் தாக்கல் செய்தால், அதற்கு ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டும். எதற்கு அவ்வளவு துாரம் இழுத்துக்கொண்டு போகிறீர்கள்; ஜூலைக்குள் கட்டி விடுங்களேன்!
என் மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். தமிழகத்தில் அவர் வாங்கிய வீட்டை விற்று, அந்த பணத்தில் அமெரிக்காவில் கல்லுாரியில் படிக்கும் மகளின் மேற்படிப்புக்காக செலவு செய்ய விரும்புகிறார். இங்கே வீட்டை விற்ற பணத்தை, அங்கு கொண்டு செல்வதற்கு உள்ள நடைமுறை என்ன? – என்.கே.ஆர். சுரேந்திரன், வாட்ஸாப்.
உங்கள் மகன் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்பதால், அவர் இங்கே சொத்தை விற்ற பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல, ரிசர்வ் வங்கி சில தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.
முதலில், வீட்டை விற்றுக் கிடைக்கும் முழுப் பணத்தையும் உங்கள் மகனுடைய என்.ஆர்.ஓ., வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். சாதாரண சேமிப்புக் கணக்கில் போடக்கூடாது. அவரிடம் என்.ஆர்.ஓ., கணக்கு இல்லை யென்றால், முதலில் அதை துவங்கச் சொல்லுங்கள்.
என்.ஆர்.ஐ., ஒருவர் சொத்தை விற்கும்போது, வாங்குபவர் அப்போதே டி.டி.எஸ்., பிடித்துக் கொண்டு தான் மீதிப் பணத்தைக் கொடுப்பார். இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட சொத்தாக இருந்தால், அதற்கு 20 சதவீதம் டி.டி.எஸ்., கட்ட வேண்டும். அதைவிட குறுகிய காலச் சொத்தாக இருந்தால், 30 சதவீதம் டி.டி.எஸ்., செலுத்த வேண்டும். இந்த வரியைக் கட்டிய பிறகுதான் பணத்தை வெளியே கொண்டு செல்ல முடியும்.
வரியை முறையாகக் கட்டிய பிறகு, ஒரு ஆடிட்டரிடம் சென்று படிவம் 15சிபி மற்றும் படிவம் 15சிஏ ஆகிய இரண்டு படிவங்களை பெற வேண்டும்:
கடைசியாக, என்.ஆர்.ஓ., கணக்கு வைத்துள்ள வங்கியில், பணத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப விண்ணப்பிக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 10 லட்சம் டாலர் (8.4 கோடி ரூபாய்) வரை அவர் இவ்வாறு வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம். கல்லுாரி செலவுக்கு இது தாராளமாகப் போதும்.
வெள்ளி இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்வது நல்லதா?- கிருஷ்ணா, கொண்டியம்பதி.
வெள்ளி விலை சமீப மாதங்களாக, கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இது எந்த திசையில் நகரும் என்பதைச் சொல்ல முடியவில்லை. உடனடியாக வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்லை; நீண்டகால அளவில் முதலீடு செய்ய விரும்பினால், எஸ்.ஐ.பி., வேண்டுமானால் போட்டு வாருங்கள். வெள்ளி ஆபரணம் மட்டுமல்ல, அதற்கு தொழில்துறை பயன்பாடு அதிகம் என்பதால், தேவை உயர்வதற்கான வாய்ப்பே அதிகம்.
தற்போது நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏதேனும் ஓரிடத்தில் முற்றுப்புள்ளி கிடைக்கும். அதனால், உங்களிடம் இருக்கும் எல்லா பணத்தையும் வெள்ளியில் போடாமல், உங்கள் போர்ட்போலியோவில் 5 சதவீதம் வரை வெள்ளி இ.டி.எப்., முதலீட்டை வைத்துக்கொள்ளுங்களேன்.
தங்கம் விலை உயரும் சூழ்நிலையில், தங்க நகை கடன் வாங்கி, தங்க நகை அல்லது தங்கக் காசு வாங்கலாமா
?
– ராமநாதன், மண்டபம்.
வேண்டாம் சார். போன வாரமே இன்னொரு நபர் தங்க கடன் வாங்கி, தங்க இ.டி.எப்., வாங்கலாமா என்று கேட்டார். அவருக்கும் வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால், உங்கள் யோசனை அதைவிட ஆபத்தானது.
நீங்கள் நகை அல்லது காசு வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற வகையில் குறைந்தது 10 முதல் 15 சதவீதம் வரை பணம் போய்விடும். கடனுக்கான வட்டி ஒரு பக்கம்; சேதாரம் ஒரு பக்கம்.
தங்கம் விலை குறைந்தது 22 சதவீதம் உயர்ந்தால் தான் நீங்கள் போட்ட அசலையே எடுக்க முடியும். கையில் உபரியாக பணம் இருந்தால் மட்டும் தங்க நகையோ, தங்கக் காசோ வாங்குங்கள். கடன் வாங்கி இவற்றை வாங்காதீர்கள்.
தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே தான் போகும் என்று எவராலும் உறுதிப்படச் சொல்ல முடியாது. என்றைக்கேனும் ஒரு நாள் விழுந்தால், உங்களால் அந்த இழப்பையும், வலியையும் தாங்க முடியுமா என்று யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் என் மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். தற்போது சிறிது சிறிதாக நகை வாங்குவதை தொடங்கலாமா அல்லது பிறகு மொத்தமாக வாங்கிக் கொள்வது என்ற முடிவை எடுக்கலாமா?- பால மோகன்தாஸ், வாட்ஸாப்.
இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து, இப்போதிருப்பதை விட, தங்கத்தின் விலை உயர்ந்துவிடுமா என்பது தான் உங்களது கேள்வியின் அர்த்தம். தங்கத்தின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றைப் பார்க்கும்போது, அது எப்போதும் உயரத்திலேயே இருந்ததில்லை; கடுமையான சரிவையும் சந்தித்து இருக்கிறது.
என் அனுமானம் சரியாக இருக்குமேயானால், அடுத்த மூன்றாண்டுகளில் தங்கத்தின் விலை குறையக்கூடும். எவ்வளவு குறையும், வீழ்ச்சி அடையுமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், மலையுச்சியிலேயே தங்கத்தின் விலை நீண்ட காலம் இருக்க வாய்ப்பில்லை.
மாதா மாதமோ அல்லது எப்போதெல்லாம் முடியுமோ, தங்க இ.டி.எப்.,பிலோ, தங்க மியூச்சுவல் பண்டிலோ பணம் போட்டு வாருங்கள். கல்யாணம் நெருங்கும் தருணத்தில், இவற்றை பணமாக மாற்றிக்கொண்டு பின்னர் ஆபரணமாக வாங்குங்கள். யார் கண்டார், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கலாம்.
