கோல்கட்டா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முக்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.
சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் சேஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
வழக்கமாக அதிரடி காட்டும் இருவரும், இந்திய அணி பவுலர்களுக்கு எதிராக ரன் குவிக்க திணறினர். இதனால், பவர் பிளே முடிவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் இழப்பின்றி 45 ரன் சேர்த்தது.
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்ற அனுபவம் வெஸ்ட் இண்டீசுக்கு உண்டு. அப்போது, மும்பையில் நடந்த அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. எனவே, அந்த தைரியத்துடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார்கள்.
ஆனால், ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரையில் இரு அணிகளும் 4 முறை மோதிய நிலையில், அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, இந்த மைதானத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இன்றைய போட்டியிலும் அது தொடரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
