கோல்கட்டா: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் ஷாய் ஹோப் 75 ரன் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சி’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இத்தாலி அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (4), ஹெட்மயர் (1) ஏமாற்றினர். ராஸ்டன் சேஸ் (24) ஓரளவு கைகொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய கேப்டன் ஷாய் ஹோப், 28 பந்தில் அரைசதம் கடந்தார். ஹோப், 46 பந்தில் 75 ரன் (4×6, 6×4) குவித்தார். ஜேசன் ஹோல்டர் (9) ஏமாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. ரூதர்போர்டு (24), மாத்யூ போர்டே (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய இத்தாலி அணிக்கு அந்தோணி மோஸ்கா (19), ஸ்மட்ஸ் (24), பென் மனென்டி (26) கைகொடுத்தனர். கேப்டன் ஹாரி மனென்டி (8), கிராண்ட் ஸ்டீவர்ட் (12) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். இத்தாலி அணி 18 ஓவரில் 123 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் 42 ரன் வித்தியாசத்தில் வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 4, மாத்யூ போர்டே 3 விக்கெட் சாய்த்தனர்.
முதல் வீரர்
வெஸ்ட் இண்டீசின் ஷமர் ஜோசப், ‘பீல்டிங்’ (4 ‘கேட்ச்’), ‘பவுலிங்கில்’ (4 விக்.,) அசத்தினார். சர்வதேச ‘டி-20’ வரலாற்றில், ஒரு இன்னிங்சில் 4 ‘கேட்ச்’, 4 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
