சென்னை: கடந்த 2025- 26ம் நிதிஆண்டில், மொத்த வாகன விற்பனை, 12 சதவீதம் அதிகரித்து, 2.94 கோடியானது. முந்தைய நிதி ஆண்டில், 2.61 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இருசக்கர வாகனங்களின் விற்பனை, 12.20 சதவீதம் அதிகரித்து, 2.11 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் வாகனங்களின் விற்பனை, 11.80 சதவீதமும், மின் வாகனங்களின் விற்பனை, 17.30 சதவீதமும் உயர்ந்து உள்ளது.
பயணியர் கார்களின் விற்பனை, 9.50 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, 12.50 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.
வர்த்தக வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் விற்பனை, அதிகபட்சமாக 15.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மின்சார வாகனங்கள் விற்பனை, 22 சதவீதம் அதிகரித்து, முதல் முறையாக 25 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின.
வலுவான கிராமப்புற தேவை, அடிப்படை மாடல்களின் தேவை அதிகரிப்பு, நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள், வாடிக்கையாளர்களின் நிதி நிலை அதிகரிப்பு, மத்திய அரசின் உட்கட்டமைப்பு செலவுகள், வலுவான தளவாட போக்குவரத்து, இ – காமர்ஸ் தேவை ஆகியவை வாகன விற்பனைக்கு முக்கிய காரணங்கள்.
பி.எம்., டிரைவ் திட்டம், இ-20 எத்தனால் கலப்பு பெட்ரோல் கட்டாயம், பழைய வாகன உடைப்பு கொள்கை, மோட்டார் வாகன விதிகள் மாற்றம் ஆகியவை பசுமை போக்குவரத்தை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.
