புதுச்சேரி: இண்டி கூட்டணியில் ஒரே தொகுதிக்கு காங்.,-தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்தும் கூட இண்டி கூட்டணி உடையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பல கட்ட பேச்சுவார்த்தை பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. காங்., கட்சி 16 இடங்களிலும், தி.மு.க., 12 இடங்களிலும் இ.கம்யூ.,-1, வி.சிறுத்தைகள்-1 என முடிவாகியுள்ளது.
இருப்பினும், தொகுதி பங்கீடு ஜவ்வாக இழுத்ததால், பல்வேறு தொகுதிகளில் கடந்த 16ம் தேதி முதல் இரு கட்சி வேட்பாளர்களும் கட்சி சார்பில் ஏ மற்றும் பி படிவத்துடன் மனு தாக்கல் செய்தனர். கட்சி கடைசி நாளான நேற்று கூட இரு கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் புடை சூழ சென்று மனு தாக்கல் செய்தனர்.
காங்., கட்சியை பொருத்தவரை 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஏ மற்றும் பி படிவத்துடன் களம் இறக்கிவிட்டது. தி.மு.க., வும் பெரும்பாலான தொகுதிகளுக்கு ஏ மற்றும் பி படிவம் கொடுத்து வேட்பாளர்களை தாக்கல் செய்ய சொல்லி விட்டது. இந்த மனு தாக்கல் தான் இப்போது இண்டி கூட்டணியில் பெரிய சிக்கலையும் புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பு மனுக்களுக்கு ஏ மற்றும் பி படிவத்தை வாரி வழங்கி காங்., -தி.மு.க., கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற சொல்ல ஆரம்பித்து விட்டன. ஆனால் பி படிவத்துடன் மனுக்களுடன் தாக்கல் செய்த இரு கட்சி வேட்பாளர்கள் பலர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். அவர்களை இரு கட்சிகளிலும் ஆட்களை தேடி வருகின்றனர். அவர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து கூட உடையும் அபாயம் உள்ளது.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: தேர்தல் நடைமுறை தெரியாமல் காங்.,-தி.மு.க., கட்சி பி படிவத்தை வாரி வழங்கி விட்டனர். இது தான் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கு ஒரு ‘ஏ’ படிவம் மற்றும் இரண்டு ‘பி’ படிவத்தை வழங்கும். இதில் ‘ஏ’ படிவம் ஒன்றும், ‘பி’ படிவம் ஒன்றையும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கட்சியின் வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும். மற்றொரு ‘பி’ படிவத்தை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.
இல்லையெனில், தொகுதி முழுவதும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலுடன் பி படிவத்தையும் கொடுக்க வேண்டும். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அதனை வேட்பு மனு தாக்கல் முடியும் 2.55 மணிக்கு முன்பாக அந்த பட்டியலை அரசியல் கட்சிகள் கொடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் சமர்பித்த பி படிவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இனி அரசியல் கட்சிகள் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மனு தாக்கல் செய்த அந்தந்த கட்சி வேட்பாளர்கள் நினைத்தால் மட்டுமே வாபஸ் பெற முடியும். அந்த நிலைமை தான் இப்போது காங்., தி.மு.க., என இரு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஒரே வேளை ஒரு தொகுதிக்கு ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் பி படிவத்துடன் மனுதாக்கல் செய்திருந்தால், முதலில் தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனு தாக்கல் தான் ஏற்றுகொள்ளப்படும்.
இரண்டாவதாக தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படும். வேட்பு மனு பரீசிலனையில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படும். ஒரு வேளை காங்., -தி.மு.க., வேட்பாளர்கள் ஒருமித்த கருத்து ஏற்பட்டு வாபஸ் பெறாவிட்டால், கஷ்டம் தான். இரண்டு கட்சிகளும் தேர்தலில் ஒரே தொகுதியில் நிற்க வேண்டி இருக்கும். கூட்டணியும் உடையும் என்றனர்.
வேட்பு மனுக்கள் மீது இன்று 24ம் தேதி பரிசீலனை நடக்கின்றது. 26ம் தேதிக்குள் அவர்கள் மனுவை வாபஸ் பெற வேண்டும். அதற்குள் இரு கட்சி வேட்பாளர்களும் சமாதானப்படுத்தி வாபஸ் பெற முயற்சி நடக்கின்றது. சுவிட்ப் செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள சூழ்நிலையில் அவர்கள் சமாதானப்படுத்தி கொண்டு வர தனி டீமை அரசியல் கட்சிகள் இறக்கியுள்ளனர். அவர்கள் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் தொகுதி பங்கீடு முடிந்தும் கூட இண்டி கூட்டணி டமால் என்று உடைந்து தனித்தனியே நிற்கும்.
