2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் தற்போது வரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாத நிலை உள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு செல்லப்பெருந்தகை கொடுத்த வேட்பாளர் பட்டியலுக்குக் கட்சியிலேயே பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். டெல்லி தலைமையிடமும் அவர் இதுகுறித்து பேசி இருந்ததாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பே இப்படி பல்வேறு அதிருப்திகள் காங்கிரசில் வெளிப்பட்டு வருகிறது.
தொடர்ந்து காங்கிரஸில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருந்த மாணிக்கம் தாகூர், அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இந்த குழுவில் ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பலரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு கடிதம் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
