– நமது நிருபர் –
த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.
கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற கோரிக்கையை, தி.மு.க.,விடம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கைவிரித்து விட்டார். ஆனாலும், ‘கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க., சம்மதிக்கவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்’ என, மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தி.மு.க., அரசை இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். அதிருப்தி அடைந்த தி.மு.க., மேலிடம், அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது.
‘நடவடிக்கை எடுத்தால் தான், வரும் 22ம் தேதிக்கு பின், காங்கிரஸ் ஐவர் குழுவிடம் பேச்சு நடத்த சம்மதிப்போம்’ என, தன் துாதர் வாயிலாக, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரிடம் கூறியுள்ளார். மேலும் அவரிடம், ‘காங்கிரசில் என்ன நடக்கிறது. ஒன்றுமே புரியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக நான் சொல்லி அனுப்பிய தகவல், ராகுல் கவனத்திற்கு போனதா என்பதும் தெரியவில்லை. ராகுல், கார்கே, வேணுகோபால், கிரிஷ் ஷோடங்கர் ஆகியோரிடம், நீங்கள் தான் பேசி பதில் பெற்று தர வேண்டும்’ என, முதல்வர் கூறியதாக தெரிகிறது.
அந்த மூத்தத் தலைவரும், டில்லி மேலிட தலைவர்களிடம், முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்களை எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு, கிரிஷ் ஷோடங்கர் மட்டுமே கவனத்தில் கொள்வதாக பதில் அளித்திருக்கிறார். ராகுல், கார்கே, வேணுகோபால் ஆகியோர் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால், காங்., தலைமை மீது கடுமையான கோபத்தில் தி.மு.க., இருக்கிறது.
சந்திப்பு முயற்சி தோல்வி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணியில், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் பங்கேற்றார். அவரையும் முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க வைக்கவும், முதல்வர் வீட்டில் தேநீர் விருந்து அளிக்கவும், காங்கிரசில் ஒரு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பாததால் சந்திப்பு நடக்கவில்லை என, காங்., தரப்பில் கூறுகின்றனர்.
போஸ்டர்கள் கிழிப்பு
சென்னை முகப்பேர் பகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணிக்கு, வேணுகோபால் வருகிறார் என தெரிய வந்ததும், ஆட்சியில் பங்கு கோரி, காங்கிரஸ் உரிமை மீட்பு குழு சார்பில், அப்பகுதியில் ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டன.
‘அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்; வேண்டும் வேண்டும் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி வேண்டும்; சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்’ என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தி.மு.க., ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்தனர்.
