வேலுார்: தமிழகம் முழுதும், வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, குழந்தைகள், பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் அதிகாரப்பூர்வ முகநுால் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார வீடியோவில், அரசு பள்ளி குழந்தைகள், ‘காட்பாடி என்றாலே துரைமுருகன் ஐயா தான்’, ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ ஆகிய வாசகங்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேபோல, வேலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,வை ஆதரித்து, தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், வேலுார் மாவட்ட தி.மு.க., அவைத்தலைவருமான முகமது சகி, பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, இரு சிறுவர்கள் தி.மு.க., கொடி மற்றும் ‘நமது வேட்பாளர் கார்த்திகேயன்’ என்ற பதாகையை பிடித்தபடி பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்த, வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதி த.வெ.க., வேட்பாளர் ரேவதி, மார்ச் 31ல் சாத்தனுாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வுக்கு, அதே பகுதியை சேர்ந்த தர்மேந்திரன் என்பவர், ஏழு சிறுவர்களிடம் த.வெ.க., பதாகைகளை கொடுத்து, பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால், தர்மேந்திரன் மீது வழக்கு பதியப்பட்டது.
