வேலுார் மாவட்டம் காட்பாடி தொகுதி நட்சத்திர தொகுதியாக, தி.மு.க.,வின் கோட்டையாகவே இதுவரை இருந்து வருகிறது.

வேலுார் மாவட்டம் காட்பாடி தொகுதி நட்சத்திர தொகுதியாக, தி.மு.க.,வின் கோட்டையாகவே இதுவரை இருந்து வருகிறது. ‘ஸிட்டிங்’ எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான துரைமுருகன் மூத்த அரசியல்வாதி, மூத்த அமைச்சர், வழக்கறிஞர், இலக்கியவாதி, மேடை பேச்சாளர், முகபாவனையிலேயே நிருபர்கள், எதிர்க்கட்சியினர், ஆளும் கட்சியினருக்கு பதில் சொல்பவர் என பன்முகத்திறமை கொண்டவர்.

மேடைதோறும் எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்க மறக்க மாட்டார். காரணம், எம்.ஜி.ஆர்., அரவணைப்பில் பள்ளிக்கல்வியை முடித்தவர்.

கந்தன் கருணை திரைப்படத்தில், முருக பெருமான் வேடத்தில் நடிக்க ஒத்திகை முடிந்து தேர்வாகிய துரைமுருகனை கண்டித்து, ‘உனக்கு நடிப்பு தேவையில்லை’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., அவரை சட்டக்கல்வி படிக்க வைத்து, அரசியலில் நுழைய வழிகாட்டினார்.

அந்த நன்றியை இன்றும் அவர் மறக்கவில்லை. கடந்த 1971 முதல் 2021 வரை, 12 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 10 முறை வெற்றி பெற்றவர். இதில் எட்டு முறை காட்பாடி, இரண்டு முறை ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றவர். வயது முதிர்வால் அவருக்கு ‘சீட்’ கிடைக்காது என்றே பலர் நினைத்தனர். ஆனால், அவருக்கே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்டிமென்டாக கண்ணீரை வரவழைத்து ஓட்டு கேட்டாலும், துரைமுருகன் கரையேறுவது, அவர் மகன் கதிர் ஆனந்திடமே உள்ளது.

ஏனெனில் கட்சி நிர்வாகிகளிடம், ‘கரன்சி’ கட்டை காட்ட வேண்டும். அதை கதிர் ஆனந்த் செய்ய மாட்டார் என்கின்றனர் தி.மு.க.,வினர். இதனால், வெற்றி பெற்று விடுவோம் என அ.தி.மு.க.,வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

அதேசமயம் அ.தி.மு.க., சார்பில் கடந்த முறை இதே தொகுதியில் துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்டு, 746 ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற ராமு, மீண்டும் களம் காண்கிறார்.

ராமுவுக்கு மக்களிடம் எளிதாக பழகுபவர் என்ற பெயர் உள்ளது. கடந்த தேர்தலில் தோற்றவர் என்ற அனுதாபமும் உள்ளது.

தி.மு.க., மாவட்ட செயலர் நந்தகுமாருக்கும் கதிர் ஆனந்துக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. அதனால் ஒருவரை ஒருவர் வீழ்த்த முயன்று வருகின்றனர். கதிர் ஆனந்துக்கு எதிராக அ.தி.மு.க., வேட்பாளர் ராமுவுக்கு நந்தகுமார் மறைமுக உதவிகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Source link