வேலுார் விநாயகர் கோயில் அருகே சட்ட விரோதமாக திறக்கப்பட்ட சர்ச் மூடல்

வேலுார்: விநாயகர் கோவில் அருகே, சட்டவிரோதமாக திறக்கப்பட்ட சர்ச், பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.

வேலுார், சேண்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. ஆதிசங்கரர் ஞான திருஷ்டியால் உருவாக்கிய, 11 சுயம்பு விநாயகர் சிலைகள் இங்கு உள்ளன. செல்வ விநாயகர் கோவில் மாட வீதியில், அனுமதியின்றி, சர்ச் கட்டப்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து, ஹிந்து முன்னணியினர் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

நேற்று காலை, இந்த சர்ச்சில் அனுமதியின்றி பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சட்டவிரோத சர்ச்சை முற்றுகையிட்டு எதிர்த்தனர். சர்ச் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதியின்றி திறக்கப்பட்ட சர்ச்சை அதிகாரிகள் மூடினர்.

ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கூறியதாவது:

ஆயுதப்படை காவலருக்கு சொந்தமான இடத்தில், சரக்கு குடோன் அமைப்பதாக கூறிவிட்டு, சர்ச் கட்டி வழிபாடு செய்ய முயன்றனர். ஊர் பொதுமக்கள் மற்றும் ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். முடிவில், போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் பேச்சு நடத்தி, சர்ச் மூடப்பட்டது.

வரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் எழக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேண்பாக்கம் பகுதியில், கிறிஸ்துவர்கள் மிக குறைவு. ஹிந்துக்களை குறிவைத்து மதமாற்றம் செய்ய, கோவில் மாடவீதியில் சர்ச் கட்டியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேலுார் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய லட்சுமியிடம் கேட்டபோது, ‘இனி கோவில் அருகே, சர்ச் செயல்படாது என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

Source link