வேலூர்: காட்பாடியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக, அத்தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளராக இருக்கும் துரைமுருகன், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 10 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் இரு முறை என மொத்தமாக 12 தேர்தலில் போட்டியிட்டு 10 வெற்றிகளை பெற்றவர். இந்த தேர்தலில் காட்பாடியில் போட்டியிடுகிறார்.
சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடி வந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு நேற்று முன்தினம் மார்ச் 29 ம் தேதி பிரசாரத்தை துவக்கினார்.
இந்நிலையில், காட்பாடியில் தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்டதாக அமைச்சர் துரைமுருகன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அண்ணாதுரை சிலைக்கு பேரணியாக சென்றதில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. நிபந்தனைகளை மீறியது, பேரணியில் பட்டாசு வெடித்தது என துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
