வேலூர்: நான்கு அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. நேற்று ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு பேரும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்டிப்படைக்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.
ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பேசியதாவது: மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஸ்டாலின். இதுவரை நடந்தது போதாதா..? 5 ஆண்டு காலம் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். இப்படி ஒரு முதல்வர் நாட்டை ஆள்வதால், நாடு சீழிந்துகொண்டு இருக்கிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும் வரை சிறுபான்மை மக்களை காத்தோம். திமுக ஆட்சி வந்த பிறகு ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, வாக்குகளை பெற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் நாங்கள் அப்படி அல்ல. வாக்குக்காக ஆட்சி செய்யவில்லை. மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி அதிமுக.
திமுக செய்வது ஒரு குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். குடும்ப ஆட்சி தேவையா, வாரிசு அரசியல் தேவையா என்று யோசித்து முடிவெடுங்கள்.நான்கு அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. நேற்று ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு பேரும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்டிப்படைக்கிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இப்படிப்பட்ட ஒரு குடும்பம் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா..?
தமிழகம் இந்த அளவிற்கு தலை குனிவதற்கு காரணம் இந்த அதிகார மையங்கள் தான். இந்த அதிகார மையங்கள் மூலம் எல்லா துறைகளிலும் கொள்ளை அடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம். இந்தந்த துறை இவர்களுக்கு என்று நான்கு பேரும் பங்கு போட்டுக்கொண்டு விட்டார்கள். பிறகு எப்படி நாடு வளரும்.? இவ்வாறு அவர் பேசினார்.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் இபிஎஸ் பேசியதாவது: எடப்பாடி பல தோல்விகளைக் கண்டுள்ளார் என்கிறார் ஸ்டாலின். நீங்கள் மமதையில் பேசுகிறீர்கள். கொஞ்சம் பிற்காலத்திற்குச் செல்லுங்கள். 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை, 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் வென்ற கட்சி அதிமுக. 2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து சரித்திரம் படைத்தார் ஜெயலலிதா.
கூட்டணியில்லாமல் வென்ற கட்சி அதிமுக. சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2014 லோக்சபா தேர்தலிலும் 37 இடங்களை பெற்றோம். நீங்கள் ஒரு இடம் கூட வெல்லவில்லை. பல இடைத்தேர்தல்களில் வெல்லவில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் வெல்லவில்லை, கூட்டுறவு சங்கத்தேர்தலில் 98% வென்றது அதிமுக. 10 ஆண்டுகாலம் வனவாசம் போன திமுகவுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? எப்படியோ தப்பித்தவறி ஆட்சி கிடைத்தது, அதைப் பயன்படுத்தி நல்லாட்சி கொடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
திமுக ஆட்சியில் மக்கள் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அது தமிழகத்தில் நடைபெறும். தமிழகத்திற்கு நான்கு முதல்வர்கள். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா. ஒன்று இருந்தாலே தாக்குப்பிடிக்க முடியாது. நான்கு பேர் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டனர். தேர்தல் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். ஒரு நல்லாட்சிக்கு துணை நிற்க வேண்டும்.
சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்களை பாதுகாக்க மாட்டோம் என்பது எவ்வளவு பெரிய பொய். கொள்கை வேறு, கூட்டணி வேறு. வாக்குகள் சிதறாமல் இருக்கவே கூட்டணி. அதிமுக கொள்கை மாறாது. சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார். நெல்லையில் ஒரு காவல்துறை எஸ்.ஐ, அவரது வலைதளத்தில், என் உயிருக்கு ஆபத்து என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறார். காவல்துறையிடம் புகாரும் கொடுத்தார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்தநாள் தொழுகை முடித்து சென்றபோது படுகொலை செய்யப்படுகிறார். இதுதான் சிறுபான்மையினரை பாதுகாக்கும் லட்சணமா..?
20 நாட்கள் திமுக, காங்கிரஸ் போராட்டம் நடந்து எப்படியோ கூட்டணி அமைத்தனர். ஆனால், யாரும் சந்தோஷமாக இல்லை. 10 ஆண்டுகாலம் திமுகவை தாங்கிப் பிடித்த விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஒரு சீட் மைனஸ். அவர்கள் கேட்கவில்லை. சட்டமன்றத்தில் புகழோ புகழ் என்று புகழ்வார்கள், மக்கள் பிரச்னையை நாங்கள் பேசுவோம், கூட்டணிக் கட்சிகள் ஒரு குறையும் சொல்ல மாட்டார்கள். அதற்கு கிடைத்த பரிசுதான் மைனஸ். மதிமுகவுக்கு நான்கு இடம் கொடுத்தனர், அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்று பேசினார்.
உங்கள் கூட்டணியில் தேமுதிக தான் சேர்ந்திருக்கிறது. 2021ல் அரை சதவீதம் வாக்குதான். அவர்களுக்கு 10 சீட். இரண்டு சதவீதம் வாங்கியவங்களுக்கு 5 சீட். மதிமுகவுக்கு நான்கு இடம் கொடுத்தார்கள். மூன்று உதயசூரியன் ஒன்று விருப்ப சின்னம், இப்போது அந்த ஒரு இடத்தையும் புடுங்கிவிட்டனர். திமுகவை எதிர்த்து தான் மதிமுக கட்சி தொடங்கியது, அதே கட்சியிடம் சரண் அடைந்து, பதவிக்காக தன்மானத்தை விட்டு திமுக சின்னத்தில் நிற்கிறார். வெட்கமாக இல்லையா..? இவ்வாறு அவர் பேசினார்.
