வேலூர்: ராணிப்பேட்டையில் தன் தந்தையும், அமைச்சருமான காந்தி போட்டியிடுவார் என, திமுக தலைமையால் வேட்பாளராக

வேலூர்: ராணிப்பேட்டையில் தன் தந்தையும், அமைச்சருமான காந்தி போட்டியிடுவார் என, திமுக தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தியும் ஒருவர். இவருக்குப் பதிலாக ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. இதனால், அமைச்சர் காந்தி அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வினோத் காந்தியும் பிரசாரத்தை துவக்காமல் இருந்து வந்தார்.

ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் நானே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு அவர் கோரிக்கை விடுத்து வந்ததாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும், தன்னுடைய தந்தையே மீண்டும் போட்டியிடுவார் என்று திமுக வேட்பாளரும், அமைச்சர் காந்தியின் மகனுமான வினோத் காந்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை; 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதிக்கும், எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்காக மகன் விட்டுக் கொடுத்தாலும், ராணிப்பேட்டை வேட்பாளர் மாற்றம் தொடர்பாக திமுக தலைமையிடம் இருந்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link