கடலுார்: கடலுாரில், பெண் உட்பட 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனுாரை சேர்ந்தவர் ராஜதுரை, 41; இவரும், கடலுார் வில்வநகரை சேர்ந்த 42 வயது பெண்ணும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது, பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அந்த பெண்ணிடம், ‘தமிழக வேளாண் துறையில் வேளாண் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வுக்கு விண்ணப்பித்தால் தேர்வு முடிவு வெளியாகும் போது, நீங்கள் தேர்ச்சி பெற்றதாக முடிவு வரும். எனக்கு வேளாண் அமைச்சரை தெரியும். கண்டிப்பாக வேலை வாங்கி தருகிறேன். வேலைக்கு 10 லட்சம் ரூபாய் தேவை. முன்பணமாக 5 லட்சம் ரூபாய் தர வேண்டும்,’ என, கடந்த 2023ம் ஆண்டு ராஜதுரை கூறினார்.
இதனை நம்பி, அந்த பெண் தனது வங்கி கணக்கில் இருந்து, 5 லட்சம் ரூபாயை, ராஜதுரையின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
தேர்வு முடிவு வெளியான போது, பதிவெண் இடம் பெறாததால் அதிர்ச்சியடைந்த பெண், ராஜதுரையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வேலை வாங்கித் தராமல் பணம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி வழக்குப் பதிந்து ராஜதுரையை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். இதில், மாவட்டத்தில் வில்வநகர் பெண் உட்பட 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 24 லட்சம் ரூபாயை ராஜதுரை மோசடி செய்தது தெரிந்தது.
