“வேலோடு வாடா….” – பாட்டுப் பாடி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய சீமான்!

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்து மாநாடு, பொதுக்கூட்டம் என அடுத்தடுத்த தேர்தல் பணியில் கடந்த ஆண்டு முதலே ஈடுபட்டு வந்தார். அதன்படி அவர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான கட்சி வேட்பாளர்களை அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி அக்கட்சியின் 462 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  அதனை தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சீமான் தொடங்கும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயண திட்டத்தை நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி, முதல் தேர்தல் பிரச்சாரப் பயணமாக வருகின்ற இன்று (23-03-26) திருத்தணி முருகன் கோயில் வழிபாடு செய்து திருத்தணி தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று நாதக தேர்தல் அறிக்கையை திருத்தணி முருகன் சன்னத்தில் வைத்து சீமான் வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அவர் வேல் ஏந்திக்கொண்டு மலையேறி முருகனை வழிப்பட்டார்.

இதையடுத்து திருத்தணியில் முருகன் பாடலை பாடி தேர்தல் பிரச்சாரத்தை சீமான் தொடங்கினார். அதில் அவர், “வேலோடு வாடா, என் முப்பாட்டன் முருகா… உன் தமிழோடு உன் பேரன் நான் வாரேன்….” என்று தொடங்கிய பாடலை முழுவதுமாக பாடினார். 

Source link