வேளாண் சட்டங்கள் போல நீட் தேர்வும் வாபஸ் பெறப்படும்- டெல்லி மாணவர் போராட்டத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆதரவு! – tn government backs delhi neet protests minister aadhav arjuna demands exam withdrawal

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் முழு ஆதரவு இருப்பதாக மாநில அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் (SRM) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டெல்லியின் குரலும் தமிழகத்தின் குரலும் ஒன்றுதான்

நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு எங்களின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும், எங்கள் முதல்வரும் எப்போதும் துணையாக நிற்போம்” என்று உறுதியளித்தார்.மேலும், “இன்றைக்குத்தான் டெல்லியில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக் குரல் பலமாக ஒலிக்கிறது. ஆனால், சகோதரி அனிதாவில் இருந்து எண்ணற்ற பல தம்பிகளைத் தமிழகம் ஏற்கனவே இழந்திருக்கிறது. நீட் விவகாரத்தில் டெல்லியின் குரலுக்கும் தமிழகத்தின் குரலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

தவெக மற்றும் பொதுமக்கள் இணைந்த ஒற்றைக் குரல்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிலவும் அரசியல் ஒற்றுமை குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழக முதல்வர், அரசு, தமிழக மக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகம் (TVK) என எல்லாரும் ஒருமித்த குரலில் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதில் அரசியல் ரீதியாகவும் சரி, தனியாகவும் சரி, நாங்கள் வலுவாக நிற்கிறோம். நீட் தேர்வு இல்லாமலேயே திறமையான மருத்துவர்களைத் தமிழகம் உருவாக்கிய வரலாற்றுப் பின்னணி நமக்கு உண்டு” என்று சுட்டிக்காட்டினார்.
எளிய சமூகப் பின்னணி கொண்ட மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி நீட் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆட்சியில் உள்ள பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்குப் பணிந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல, நாடாளுமன்றத்தில் இந்த நீட் தேர்வும் ஒருநாள் நிச்சயமாக வாபஸ் பெறப்படும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

டெல்லி ஜந்தர் மந்திரில் தொடரும் சிஜேபி கட்சியின் போராட்டம்

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லி ஜந்தர் மந்திரில் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது

கடந்த ஜூலை 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்பட்ட போது, டெல்லி போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர் இந்த வன்முறையில் பல மாணவர்கள் காயமடைந்து, கைது செய்யப்பட்டுள்ள சூழலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர் அமைப்புகள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link