வைர வியாபாரி நிரவ் மோடியின் இரு சகோதரர்களுக்கு 'கிடுக்கி'

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 23,780 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் இரு சகோதரர்களுக்கும், மும்பை சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி மற்றும் நிரவ் மோடி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 23,780 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில், இருவரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று தப்பியதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில், கடந்த 2019ல், நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது. மெஹுல் சோக்சியையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள சோக்சியை நாடு கடத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. நிரவ் மோடி, மற்றொரு ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிரவ் மோடிக்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து, கடன் மோசடி செய்ய உதவியதாக அவரது சகோதரர்கள் நீஷல் மற்றும் நெஹல் மோடிக்கு எதிராகவும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக ஏன் அறிவிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது .

மேலும், நிரவ் மோடியின் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆதித்ய நானாவதி மற்றும் சந்தீப் மிஸ்திரிக்கும் இதே போன்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, நான்கு பேரும் வரும் மே 7ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link