புதுடில்லி: ‘வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு தாராளமாக நாடு கடத்தலாம்’ என, பெல்ஜியம் அரசுக்கு, ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இந்தியா சுமத்திய ஏழு குற்றச்சாட்டுகளில், ஆறு குற்றச்சாட்டுகளை பெல்ஜியம் மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, தன் சகோதரி மகன் நிரவ் மோடியுடன் இணைந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
கைது கடந்த 2018ல், இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. தலைமறைவான மெஹுல் சோக்சி, கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பியோடினார். பின்னர் புற்றுநோய் சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்கு சென்றார்.
இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய பெல்ஜியம் அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தது. இதை ஏற்ற பெல்ஜியம் போலீசார், சோக்சியை கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்தனர்.
பெல்ஜியம் உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபரில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சோக்சி முறையிட்டார்.
அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, உயர் நீதிமன்றத்தின் விசாரணை நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சோக்சி மனு தாக்கல் செய்திருந்தார்.
பச்சைக்கொடி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சோக்சியை நாடு கடத்தும் சட்ட நடைமுறையில் எந்த தவறும் இல்லை, விசாரணையை தொடரலாம்’ என கூறி பச்சைக்கொடி காட்டியது.
இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது.
அதன்படி, நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சோக்சி மீதான ஏழு குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த விசாரணை குழு, சதித் திட்டம் தீட்டுதல், நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், கணக்குகளில் முறைகேடு செய்தல், அரசு அதிகாரிகள் உடந்தையுடன் முறைகேடாக ஆதாயம் பெறுதல் மற்றும் முறைகேடான நடத்தை என, ஆறு குற்றச்சாட்டுகள் பெல்ஜியம் சட்டத்தின்படி தண்டனைக்குரியவை என அறிவித்தது. எனவே, அவரை நாடு கடத்தலாம் என ஒப்புதல் அளித்தது.
எனினும், ஆதாரங்களை அழித்தல் என்ற குற்றச்சாட்டு மட்டும், பெல்ஜிய சட்டத்தின்படி நாடு கடத்துவதற்கான குற்றமாக கருத முடியாது என தெரிவித்தது.
மேலும், 2021ல் ஆன்டிகுவாவில் இருந்து தான் கடத்தப்பட்டதாக, மெஹுல் சோக்சி முன்வைத்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நிராகரிப்பு நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் சித்ரவதைக்கு உள்ளாவேன்; நீதி மறுக்கப்படும் என பாதுகாப்பு குறித்த சோக்சியின் வாதங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.
ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை, தற்போது பெல்ஜியம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்து, மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான இறுதி முடிவை பெல்ஜியம் அரசு விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
