ஷில்லாங்: மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்ட கவுன்சில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஏற்பட்ட மோதலை தடுக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், பழங்குடி மக்களுக்காக கரோ ஹில்ஸ் சுயாட்சி மாவட்ட கவுன்சில், 1952ல் உருவாக்கப்பட்டது.
இந்த கவுன்சிலுக்கான தேர்தல் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 16ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பழங்குடியின சான்றிதழ்களை வழங்குவதை கட்டாயமாக்கும் தீர்மானத்தை, மாவட்ட நிர்வாகக் குழு சமீபத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் புல்பாரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்டமூர் மோமின் என்பவர் இத்தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் துரா பகுதிக்கு சென்றார்.
இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால், அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மேற்கு கரோ மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் சிபினாங் பகுதியில் கரோ பழங்குடியினத்தைச் சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மோதலை தடுக்க முற்பட்டனர்.
அப்போது அக்கும்பலை கலைக்க, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்த மாவட்ட எஸ்.பி., ஆபிரகாம் டி சங்மா கூறுகையில், “சட்டவிரோதமாக கூடி, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
”இதில், இரண்டு பேர் இறந்தனர். தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. பதற்றத்தை தடுக்க, மாவட்டம் முழுதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
”சமூக ஊடகங்கள் மூலம் கும்பல் சேர்ப்பதை தடுக்கும் நோக்கில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்றார்.
