டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும் என்று வங்கதேசத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் வங்கதேச தேசியவாத கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்டுக்கட்டையாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வெடித்த கிளர்ச்சியால் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த சமயத்தில், 2024 கலவரத்தின் போது நடந்த மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தொடரப்பட்ட வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வந்தது.
தற்போது, வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றது. விரைவில் அங்கு புதிய அரசு பொறுப்பேற்க இருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும் என்று நம்புவதாக வங்கதேசத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; இந்த விவகாரம் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான உறவில் ஒரு தடையாக இருக்காது. அவர் அங்கிருப்பதை இந்தியா ஒருபோதும் மறுக்கவில்லை. அதேபோல், ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப மாட்டோம் என்றும் இந்தியா கூறவில்லை. சர்வதேச விதிகளின் அடிப்படையில் ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
