ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஷ்னா

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா முன்னேறினர்.

மும்பையில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை அனாஹத் சிங் 18, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். இதில் எகிப்தின் பரிதா வாலித்தை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-6 என வென்ற அனாஹத், அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றினார். தொடர்ந்து 3வது செட்டையும் 11-5 என வசப்படுத்தினார். முடிவில் அனாஹத், 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சீனியர் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 39, அயர்லாந்தின் பிராயான்னே பிளைனை சந்தித்தார். இதில் ஜோஷ்னா 3-1 என்ற (12-10, 11-4, 8-11, 11-9) செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தான்வி கன்னா, 3-0 என (11-5, 11-9, 11-9) என எகிப்தின் நுார் கபாஹியை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் அதிர்ச்சி

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரில் ‘நம்பர்-3’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ரமித் டான்டன், 0-3 என (9-11, 4-11, 9-11) மலேசியாவின் துகான் லீயிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், 0-3 என (8-11, 9-11, 9-11) என மலேசிய வீரர் அமீஷன்ராஜிடம் வீழ்ந்தார்.

Source link