'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், ஊடகவியலாளர்கள் கருத்தை பதிவு செய்கிறது இந்தக் கட்டுரை.

மகளிருக்கு ரூ.5000 | ஊடகவியலாளர்களின் பார்வையில்

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், “தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசியலை தொடர்ந்து கவனித்து வரும் ஊடகவியலாளர்கள் பார்வையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறார்கள் எனக் கேட்டோம்.

`விமர்சிப்பது வர்க்கப் பாசிசம்’
மூத்த ஊடகவியலாளர் விஜயசங்கர்

முதலில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருப்பது சலுகை அல்ல, பெண்களின் ‘உரிமை’. சமூகத்தில் பெண்கள் செய்யும் ‘கண்ணுக்குத் தெரியாத உழைப்பு’ இதுவரை பொருளாதாரக் கணக்கீட்டில் சேர்க்கப்படவே இல்லை. ஒரு ஆண் வெளியில் சென்று உழைப்பதற்குத் தேவையான அனைத்து பின்னணி வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள் ‘இரட்டைப் பணி’ செய்கிறார்கள். அவர்களின் இந்த உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு சிறு முயற்சியே இந்த உரிமைத் தொகை.

ஊடகவியலாளர் விஜய சங்கர்
ஊடகவியலாளர் விஜய சங்கர்

ஆனால், இந்தத் தொகையை உயர் நடுத்தர வர்க்கத்தினர் சோம்பேறித்தனம் என்கிறார்கள். ஆனால், 90% பயன் பெறுபவர்கள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழைப் பெண்கள். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்திய முதலாளிகளுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 30%-லிருந்து 25%-ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் விலைவாசி குறைந்ததா? வேலைவாய்ப்பு பெருகியதா? என்றால் இல்லை. முதலாளிகளுக்குக் கோடி கோடியாக அள்ளிக் கொடுப்பதை யாரும் ‘லஞ்சம்’ என்று சொல்வதில்லை. ஆனால், ஏழைப் பெண்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பதை விமர்சிப்பது ஒரு வர்க்கப் பாசிசம்.

இந்தப் பணம் கணவர்களால் பறிக்கப்பட்டு டாஸ்மாக்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதா என்றால், விதிவிலக்குகளை வைத்து விதியை உருவாக்க முடியாது. ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கலாம். அதற்காகத் திட்டத்தையே முடக்குவது, இதற்குத் தீர்வாகது. நேரடியாகப் பணமாகக் கொடுக்காமல் ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களாக வழங்கலாம் என்ற மாற்றுச் சிந்தனைகளும் ஆராயப்பட்டு வருகிறது.

பிகார் தேர்தலின் போது ரூ.10,000 வழங்கியபோது மௌனமாக இருந்தவர்கள், இப்போது இங்கே விமர்சனம் செய்வது அவர்களின் வயிற்றெச்சல் என்பேன். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் செய்வார்கள். இது ஒரு பொருளாதார முன்னெடுப்பு என்பதைத் தாண்டி, பெண்களுக்கு ஒரு சிறு ‘நிதி சுதந்திரத்தை’ வழங்குகிறது. எனவே இது வரவேற்கத்தக்கது.”

`எந்த தரவும் இல்லாமல் ஆதரிக்க முடியாது’
ஊடகவியலாளர் ஜெயராணி
ஜெயராணி
ஜெயராணி

மாதாந்திரமாகக் கொடுக்க வேண்டிய தொகையை ஒட்டுமொத்தமாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், 5,000 ரூபாயாகக் கொடுப்பது எதற்காக என்பது வெளிப்படையானது. அரசு இவ்வளவு பெரிய தொகையை தனி நபர்களுக்குச் சலுகையாக வழங்குவதற்குப் பதிலாக குடிநீர் வசதி, தரமான சாலைகள், தெரு விளக்குகள், பேருந்து வசதி, போதை ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். விளிம்புநிலை சமூகக் குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

பெண்களின் வங்கிக் கணக்குக்கு வந்திருக்கும் இந்த 5,000 ரூபாய மீண்டும் அரசுக்கே டாஸ்மாக் வழியாக செல்லக் கூடும். கடந்த சில ஆண்டுகளில் கொடுக்கப்படும் இந்த தொகை காரணமாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? பாதுகாப்பு கிடைத்துள்ளதா? என்பது பற்றி ஆய்வு ரீதியான எந்த தரவும் இல்லாமல் இதை ஆதரிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை மக்களின் வரிப்பணம் முழுக்க, முழுக்க அவர்களின் எல்லா வகையான உரிமைக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தேர்தலை மையப்படுத்திய வண்ணமயமான சலுகைகளுக்காக அல்ல.”

`பெண்களுக்குக் கிடைக்கும் நிதி சுதந்திரம்’
ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்

டெல்லியில் இலவசத் திட்டங்களுக்கு எதிராக பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்தத் தடை வருவதற்கு முன்பே விடியற்காலையிலேயே பணத்தை வரவு வைத்தது தமிழக அரசின் மிகச் சாமர்த்தியமான ஒரு நடவடிக்கை. பா.ஜ.க இதை முடக்க நினைத்த நிலையில், அந்த முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் முன்கூட்டியே முறியடித்துள்ளார்.

இலவசங்கள் என்பதை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை, ஆனால் இது ஒரு ‘வெல்பேர் மாடல்’. குறிப்பாக, விலையில்லாப் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டும் பெண்களின் சுதந்திரத்தைப் பரவலாக்குகிறது. ஒரு பெண் யாரிடமும் கணக்குக் காட்டத் தேவையில்லாத, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத ஒரு சிறு தொகை கையில் இருப்பது அவர்களின் சுயமரியாதைக்கு மிக முக்கியம்.

கவிதா முரளிதரன்
கவிதா முரளிதரன்

இந்தப் பணம் முழுவதும் டாஸ்மாக்குக்குதான் செல்லும் எனப் பொதுவாகச் சொல்ல முடியாது. ஒரு சில இடங்களில் அப்படி நடக்கலாம், ஆனால் அதைக் காரணமாகச் சொல்லி அனைத்துப் பெண்களுக்குமான வாய்ப்பையும் மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, குடும்பப் பொறுப்பை உணர்ந்த குடும்பத் தலைவிகள், அவ்வளவு எளிதாகத் தங்கள் பிள்ளைகளின் உணவிற்கான பணத்தைத் டாஸ்மாக்கிற்குத் தரமாட்டார்கள். ஆண்கள் பெரும் தொகை கிடைத்தால் உடனடியாகச் செலவு செய்வார்கள், ஆனால் பெண்களுக்கு லாங்-டெர்ம் யோசனை உண்டு.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இந்த 5,000 ரூபாயை வைத்துத் தங்கள் குடும்பத்திற்குத் தேவையானதைச் சிறப்பாகத் திட்டமிடுவார்கள். மாநிலத்தில் அடிப்படை வசதிகள் தேவைதான், அதேபோல் கடன் சுமையும் உள்ளது. ஆனால், அதைக் காரணம்காட்டிப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைத் தள்ளிப்போட முடியாது. ஒரு சிறு அளவிலாவது பெண்களுக்குக் கிடைக்கும் இந்த நிதி சுதந்திரத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.”

‘இலவம்: போட்டியில் ஸ்டாலின் வெற்றி’
மூத்த ஊடகவியலாளர் ரவீந்திரன் துறைசாமி

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ. 5,000-ஆக அதிரடியாக உயர்த்தி வழங்கியுள்ளது, தி.மு.க-வின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ (Master Stroke). தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் நகர்வு. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இலவசத் திட்டங்கள் மூலம் மிகப்பெரிய மக்கள் ஆதரவு வளையம் இருந்தது. இப்போது மகளிர் உரிமைத் தொகை மூலம் அந்த வளையம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அவர் அரசியல் ரீதியாகத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தி.மு.க அரசு ரூ1,000 கொடுத்து வந்த நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2,000 ரூபாய் தருவோம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், ஸ்டாலின் மூன்று மாத நிலுவைத் தொகை ரூ3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ2,000 எனச் சேர்த்து 5,000 ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கியது, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பதற வைத்துள்ளது. இந்த இலவம் வழங்கும் போட்டியில் ஸ்டாலின் தற்போதைய நிலையில் வெற்றி பெற்றுவிட்டார்.

பிகாரில் நிதிஷ் குமார், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அந்தந்த அரசுகள் இத்தகைய திட்டங்கள் மூலம் பலன் அடைந்திருக்கின்றன. தமிழகத்திலும் இந்தத் திட்டம் தி.மு.க-வுக்குத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும். மகளிர் உரிமைத் தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஸ்டாலினின் பக்கம் திரும்புவார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் சீமானை நோக்கி நகர வாய்ப்புள்ளது. ஏனென்றால், மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இலவசங்களை ஆதரிப்பவை தான்.

மத்திய மோடி அரசு இந்தத் திட்டத்தை முடக்கப் பார்க்கிறது என்ற முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஒரு தெளிவான அரசியல் யுக்தி. ‘இவ்வளவு அவசரமாக நான் ஏன் இந்தப் பணத்தைக் கொடுக்கிறேன்’ என்பதை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்கும், அவர்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்குவதற்கும் ஸ்டாலின் இதைப் பயன்படுத்தியுள்ளார்.”

`இலவசம் மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது’
ஊடகவியலாளர் நந்தகுமார்

இந்த 5,000 ரூபாய் கிடைத்ததற்கான ‘எல்லா புகழும் எடப்பாடிக்கே’ போய்ச் சேரும். எடப்பாடி பழனிசாமி 2,000 ரூபாய் தருவோம் என்று சொன்னதால்தான், வேறு வழியில்லாமல் தி.மு.க அரசு இப்போது அவசரமாக அட்வான்ஸ் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது என்று ஒருபுறம் கூறும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் 1.31 கோடி பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்? இதில் எது உண்மை? திராவிட மாடல் வளர்ந்திருக்கிறதா அல்லது மக்களை ஏழையாகவே வைத்திருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

நந்தகுமார்
நந்தகுமார்
edited by grok

ஐந்தாண்டு காலத்தில் 5 லட்சம் கோடி கடனை வாங்கிவிட்டு, இப்போது ஓட்டுக்காகப் பணத்தை வாரி வழங்குவது நீண்ட காலத்திற்குப் பயன் தராது. ஒரு நாளைக்கு வெறும் 31 ரூபாய் கொடுத்துவிட்டு, அதுதான் பெண்களின் உரிமையின் விலை என்று நிர்ணயிப்பது பெண்களை அவமானப்படுத்தும் செயல்.

9.36 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழக அரசு, கையில் காசு கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தைக் கொண்டு கிராமங்களில் தொழிலகங்களை உருவாக்கி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, உற்பத்தியைப் பெருக்கும் கேப்பிட்டலாக மாற்றியிருக்கலாம். அதன்மூலம் பெண்கள் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலையை உருவாக்கியிருக்கலாம்.

காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகள் விலகிச் செல்லக்கூடும் என்ற அச்சத்திலும், எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று வருவதாலும், தி.மு.க இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இது சர்ப்ளஸ் பட்ஜெட்டில் இருந்து கொடுக்கப்படும் பணமல்ல, கடனாக வாங்கித் தேர்தலுக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம். பிகாரில் இதுபோலக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் தவறுதான். இலவசப் பணப்பரிமாற்ற மாடல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானது.”

இதில் உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..!

Source link