ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி- தஞ்சை விவசாயிகளுக்கு இ.பி.எஸ். புதிய வாக்குறுதி

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம் வந்த போது கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தஞ்சைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தது டெல்டாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு  சுற்றுப்பயணம் செய்து வரும்  எடப்பாடி பழனிசாமி,   தஞ்சாவூர் செல்லும் வழியில் சாலையில் வரவேற்கக் காத்திருந்த விவசாயிகளைக் கண்டதும், தன் வாகனத்தை நிறுத்தி இறங்கினார்.அவர்களிடம் பேசிய இபிஎஸ், “அதிமுக ஆட்சியில் கடைகளில் கிடைக்கும் மாதிரியான தரமான அரிசி கொடுப்போம், விலையில்லாமல் பருப்பு மற்றும் எண்ணெய் கொடுப்போம். ஏழைகளுக்கு விலையில்லா கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்போம். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்” என்றார்.

அப்போது விவசாயப் பெண்கள் இபிஎஸ்ஸிடம், “பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதற்கு சரியான பேருந்து வசதிகள் இல்லை…” என்று சொன்னார்கள்.அதற்கு எடப்பாடி, “பிள்ளைகள் செல்வதற்கு 5 லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் வாங்க தலா 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்போகிறோம். நீங்கள் மாதம் 500 ரூபாய் கட்டினால், 12 மாதத்தில் ஸ்கூட்டர் உங்களுக்கு சொந்தமாகிவிடும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 33 ஆயிரம் ரூபாய் தான். பிளக்கில் போட்டு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம், 40 கிலோமீட்டர் வரை செல்லும்” என்றார்.

தொடர்ந்து பெண்கள் டாஸ்மாக் கடையை அடைக்க வேண்டும் என்று கேட்டனர், அதற்கு இபிஎஸ், “படிப்படியாகத் தான் மதுக்கடைகளை குறைக்க முடியும், ஒரே நேரத்தில் குறைத்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். இதை எங்கள் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம். நான் ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்றபோது 500 கடைகளை மூடினேன், அம்மா இருக்கும்போதும் மூடினார்கள். மதுவைத் தடுக்க முடியவில்லை, நிறைய மக்கள் அடிமையாகிவிட்டனர். அதனால், அடுத்த அதிமுக ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நீங்கள் நினைக்கும்படி செய்வோம். டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் திட்டம் உங்களுக்கு வரப்பிரசாதம், டிரோனுக்கு மானியம் கொடுக்கப்படும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலையில்  நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்று நீண்ட காலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த பிரச்சினையை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்கவில்லை என்பதால், அவர் தேர்தல் சுற்றுப்பயணம் வந்த நேரத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம், பிரச்சாரத்திற்கு சென்ற இபிஎஸ்க்கு  வரவேற்பு அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link