ஸ்டாலின் அரசு ஊழல் மிகுந்தது: மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல் தாக்கு

கோவை: ”தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஊழல் மிகுந்தது,” என மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல் பேசினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து, மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல், காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் நேற்று ‘ரோடு ஷோ’ நடத்தினார். பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார்.


அப்போது, மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல் பேசியதாவது: ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையக் கூடாது என்கிற நிலையில் உள்ளோம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

செந்தில்பாலாஜி ஊழல்வாதி. டாஸ்மாக் ஊழல்; மின்வாரிய ஊழல் என பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலேயே ஊழல் ஆட்சி என்று சொன்னால், தி.மு.க., ஆட்சியையே கூற வேண்டும். நடுத்தர மக்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் துன்புறுத்துகிறது. விலைவாசி உயர்வால் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சிக்கு வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் உங்களுக்காக உழைக்கக் கூடியவர். அவரே வெற்றி பெற செய்ய வேண்டும்.

தி.மு.க.,வின் வசூல் ஏஜன்ட்டாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில்பாலாஜி செயல்படுகிறார். செந்தில் பாலாஜியை வீழ்த்துவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பிரச்னையும் வராது. தமிழகத்தில் ஜெயலலிதா, ஆட்சி மலர வேண்டும்; இரட்டை இலைக்கு ஓட்டளியுங்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு, பீயூஸ் கோயல் பேசினார்.

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கே.கே. புதூர் பகுதியில் பேசுகையில், ”பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்காக 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுக்க நினைக்கிறார். தி.மு.க. காங்கிரஸ் அதை கெடுக்க நினைக்கிறது. அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை விரும்பவில்லையா என்று கேட்க வேண்டும். இந்த தொகுதியில் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனை களமிறக்கியுள்ளோம்.

ஊழல், போதை ஆட்சிக்கு முடிவுகட்டி, அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம். கடந்தமுறை நீங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியை வெற்றி பெற வைத்து வரலாறு படைத்தீர்கள். இந்தமுறையும் நீங்கள் மீண்டும் அதே வரலாற்றை படைக்க வேண்டும். தமிழகத்தில் கோட்டையை பிடிக்க வேண்டும் என்றால், அதற்கு கோவை வழியாக தான் செல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link