ஸ்டாலின், விஜய் மனு தாக்கல்; பல கட்சி வேட்பாளர்களும் துவக்கினர்!

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில், சென்னை கொளத்துாரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் த.வெ.க., தலைவர் விஜய், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் உட்பட, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 498க்கும் மேற்பட்டோர் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில், தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., – நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. காங்கிரஸ் – பா.ஜ., தவிர, மற்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

உறுதிமொழி

இந்நிலையில், மனு தாக்கல் நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கியது. சென்னை கொளத்துார் தொகுதியில், நான்காவது முறையாக போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், மதியம் 12:20 மணிக்கு, பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் மனு தாக்கல் செய்தார்; உறுதிமொழி படிவத்தையும் முதல்வர் வாசித்தார்.

அதன்பின், திறந்த ஜீப்பில் ஏறி, கையை அசைத்தபடியே சிறிது துாரம் சென்றார். அங் குள்ள காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சியில், ‘நம்ம கொளத்துார்; நம்ம பெருமை’ என்ற கையேட்டை வெளியிட்டார்.

கொளத்துார் தொகுதிக்கு ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த விபரங்கள், அதில் இடம் பெற்றுள்ளன.

சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு, பிரசார வேனில் வந்தார்.

அணிவகுப்பு

அவரை பின்தொடர்ந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். மதியம் 12:10 மணிக்கு தன் மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம்விஜய் வழங்கினார். பின், மதியம் 1:30 மணிக்கு பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை துவக்கினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான், அங்குள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். சீமானுக்கு மாற்று வேட்பாளராக, அவரது மனைவி கயல்விழி மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 234 பேரும் நேற்று மாட்டு வண்டி, ஏர் கலப்பை உள்ளிட்டவற்றுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மனு தாக்கல் துவங்கிய முதல் நாளிலேயே, மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தமாக நேற்று 498 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அமோக வெற்றி: முதல்வர் நம்பிக்கை
கொளத்துார் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: கொளத்துார் தொகுதியில் ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்; நான்காவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறேன். மூன்று முறை இருந்ததை விட, தற்போது கூடுதல் ஆதரவு இருப்பதை பார்க்கிறேன். எனவே, அமோக வெற்றி பெறுவேன். மாநிலம் முழுதும் எப்போதும் போல, தி.மு.க., தேர்தல் பிரசாரம் வலுவாக இருக்கும். தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரபாகரன் பெயரால் சீமான் உறுதிமொழி
காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவகோட்டை சப் – கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ்சிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது, ”உயிர்ப்பால் ஊட்டிய என் தாய் மீதும், அறிவுப்பால் ஊட்டிய தாய் தமிழ் மீதும், உயிரினும் மேலாக நேசிக்கும் என் உயிர் தலைவன் பிரபாகரன் மீதும் உறுதியிட்டு கூறுகிறேன்,” என உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவருடன் தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி வந்திருந்தனர். சீமான் போலவே, அவரது கட்சி வேட்பாளர்களும் பிரபாகரன் பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விஜய்க்கு ரூ.643 கோடி சொத்து
சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., தலைவர் விஜய், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், தன் சொத்து விபரத்தை தெரிவித்துள்ளார். அதன் விபரம்: த.வெ.க., தலைவர் விஜய், கடந்த ஆண்டு 184.53 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக, வருமான வரி கணக்கு சமர்ப்பித்துள்ளார். அவரிடம் 2 லட்சம் ரூபாய்; மனைவி சங்கீதாவிடம் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளன. மேலும், 80.54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ., கார்; 2 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ., கார்; 3.01 கோடி ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா கார்; 1.63 கோடி ரூபாய் மதிப்புள்ள டொயோட்டா கார்; 5.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி சுசூகி கார்; 67,400 ரூபாய் மதிப்பிலான டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., வாகனம் உள்ளன. அதேபோல், விஜயிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள்; 883 கிராம் தங்கம்; அவரது மனைவி சங்கீதாவிடம் 2 கிலோ வெள்ளி; 3 கிலோ தங்கம்; 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் உள்ளன. மொத்தமாக விஜய் பெயரில் 404.58 கோடி; மனைவி சங்கீதா பெயரில் 15.51 கோடி என, மொத்தம் 420.09 கோடி ரூபாய் மதிப்பிற்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. இவை தவிர, விவசாய நிலம், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக கட்டடங்கள் என, விஜய் பெயரில் 220.15 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள்; மனைவி சங்கீதா பெயரில் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. மொத்தமாக அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு 642.74 கோடி ரூபாய். பல்வேறு அறக்கட்டளைகளில் விஜய் அறங்காவலராக உள்ளார். தன் மனைவி சங்கீதாவை இல்லத்தரசி என மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். லயோலா கல்லுாரியில், 1992ல் பி.எஸ்சி., படித்த விஜய், பாதியில் நின்று விட்டதாகவும், கடன் எதுவும் இல்லை என்றும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

சீமானின் சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி
சீமானின் சொத்து கணக்கு குறித்து, அவரது வேட்பு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: சீமான் கையிருப்பில் 50,000 ரூபாய் ரொக்கம், அவரது மனைவி கயல்விழியிடம் 35,000 ரூபாய் ரொக்கம் உள்ளன. சீமானிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் கார், மனைவியிடம் 25 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கார்கள் உள்ளன. அத்துடன், 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 150 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் 2.08 லட்சம் ரூபாய் மதிப்பில் 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளன. சீமானிடம் 39.81 லட்சம் ரூபாய்; மனைவியிடம் 2.57 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. சீமான் பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், மனைவி பெயரில் 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மொத்தமாக சீமான் மற்றும் அவரது மனைவி பெயரில், 3 கோடியே 83 லட்சத்து 88,680 ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. மேலும், சீமானுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் 5.11 லட்சம் ரூபாய் கடனும், அவரது மனைவி பெயரில் 18.39 லட்சம் ரூபாய் கடனும் உள்ளன; அத்துடன், 24 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link