சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், அவரது செல்போன் வரவேற்பு அறையில் இருந்ததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.
பொதுவாக இது போன்ற சூழலில் பதற்றமடைவது இயல்பு, ஆனால் இந்தப் பாட்டியோ சற்றும் யோசிக்காமல் தனது ஜன்னல் வழியாக வெளியேறி, கட்டடத்தின் வெளிப்புறச் சுவற்றின் வழியாகக் கீழே இறங்கத் துணிந்தார்.
வெறும் கைகளால் ஏர் கண்டிஷனர் மெஷின்களைத் தாங்கும் இரும்பு கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, 27-வது மாடியிலிருந்து அவர் மெல்ல மெல்லக் கீழே இறங்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட கட்டடப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாட்டியைப் பார்த்து நகர வேண்டாம் என்று கத்திய போதிலும், அவர் விடாமுயற்சியுடன் கீழே இறங்கி வந்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
கிட்டத்தட்ட 21-வது மாடியை அவர் எட்டியபோது, சுமார் 50 மீட்டர் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பாதுகாப்பு கயிறுகளைப் பயன்படுத்தி, ஜன்னல் வழியாக அவரை உள்ளே இழுத்துக் காப்பாற்றினர். இத்தனை உயரத்தில் இருந்து கீழே இறங்கியும் அவருக்குச் சிறு காயம்கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்தின் உச்சம். எனினும், நீண்ட நேரப் போராட்டத்தால் அவர் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார்.

மீட்கப்பட்ட பின், “நான் தரைத்தளம் வரை இப்படியே இறங்கிவிடலாம் என்றுதான் நினைத்தேன்” என்று அந்தப் பாட்டி சாதாரணமாகக் கூறியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்தப் பாட்டியின் சாகச வீடியோ வைரலாகி வரும் நிலையில், 89 வயதில் இவருக்கு இருக்கும் மனதிடத்தையும் உடல் வலிமையையும் கண்டு, இவரை “ரியல் லைஃப் ஸ்பைடர் வுமன்” மற்றும் “சூப்பர் பாட்டி” என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
அதே சமயம் எதற்கு இத்தகைய விபரீத முயற்சி என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
