சென்னை: தமிழகத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்பட்ட நகரங்களில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் தற்போதைய நிலவரம் குறித்து, மத்திய அரசு விபரம் கேட்டுள்ளது.
நாடு முழுதும், 100 நகரங்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மேம்படுத்தப்படும் என மத்திய அரசு, 2015ல் அறிவித்தது. இதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில், 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கண்காணிப்பு
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஐ.சி.சி.சி., எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு நகரத்திலும் துாய்மை பணிகள், குடிநீர் வடிகால், போக்குவரத்து மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை, 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணிகளை, இந்த மையம் மேற்கொள்ளும்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, ஈரோடு ஆகிய, 11 நகரங்களில், ஐ.சி. சி.சி., மையங்களை ஏற்படுத்த, மத்திய அரசு, 2021ல் நிதி வழங்கியது.
இதில் முதற்கட்டமாக, 107 கோடி ரூபாயில், சென்னை, வேலுார், திருப்பூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய ஒன்பது நகரங்களில் இந்த மையங்கள், 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன.
உத்தரவு
தமிழகத்தில் பேரிடர் காலத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில், இந்த மையங்கள் செயல்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், இந்த மையங்களின் செயல்பாடு குறித்த விபரங்களை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதன்படி, இந்த மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன; தற்போது இதன் நிலவரம் குறித்த விபரங்களை அனுப்ப, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
