லண்டன்: ‘தி ஹண்டிரடு’ தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை, ரூ. 1.11 கோடிக்கு மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
இங்கிலாந்தில் பெண்களுக்கான ‘தி ஹண்டிரடு’ தொடரின் 6வது சீசன், வரும் ஜூலை 21ல் துவங்குகிறது. பைனல் ஆகஸ்ட் 16ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. நடப்பு சாம்பியன் லீட்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீராங்கனைகள் ஏலம் நடந்தது. 178 பேர் இதில் பங்கேற்றனர்.
தவிர, ஒவ்வொரு அணிகளும் வீராங்கனைகளை முன்னதாக ஒப்பந்தம் செய்ய அனுமதி தரப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ரூ. 1.11 கோடிக்கு மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நேரடியாக ஒப்பந்தம் செய்தது. மற்றொரு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரூ. 74 லட்சத்திற்கு, சவுத்தர்ன் பிரேவ் அணி, ஒப்பந்தம் செய்தது. இந்திய அணி ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு ரூ. 34 லட்சம் கொடுத்து லீட்ஸ் அணி வாங்கியது.
யாருக்கு ‘ஜாக்பாட்’
ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகளை வாங்க பலத்த போட்டி நிலவியது. முன்னணி பேட்டர், பெத் மூனேவை வாங்க பல அணிகள் போட்டியிட்டன. முடிவில், டிரன்ட் ராக்கெட்ஸ் அணி, அதிகபட்சம் ரூ. 2.59 கோடி கொடுத்து வாங்கியது. இதே போல, நியூசிலாந்தின் சோபி டெவைன், ரூ. 2.59 கோடிக்கு வேல்ஸ் பயர் அணி தட்டிச் சென்றது.
இங்கிலாந்தின் டேனியலி கிப்சனை, ரூ. 2.34 கோடிக்கு லீட்ஸ் அணி வாங்கியது. தென் ஆப்ரிக்காவின் ‘ஆல் ரவுண்டர்’ நாடின் டி கிளர்க் (ரூ. 2.09 கோடி), லண்டன் ஸ்பிரிட் அணியில் இணைந்தார். இங்கிலாந்தின் லாரன் பெல் (ரூ. 1.73 கோடி) சவுத்தர்ன் பிரேவ் அணிக்கு சென்றார்.
