ஸ்ரீவில்லிபுத்துார்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புதன்தோறும் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு கொல்லம்,

ஸ்ரீவில்லிபுத்துார்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புதன்தோறும் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு கொல்லம், தென்காசி, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாங்கண்ணி சென்று வர வசதியாக செங்கோட்டையிலிருந்து விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக தினமும் ரயில் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் புதன்தோறும் எர்ணாகுளத்தில் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு கொல்லம், தென்காசி, சிவகாசி, மதுரை, திருச்சி வழியாக மறுநாள் மாலை 5:35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வாரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இதன் மூலம் தென் மாவட்ட மக்கள் ரயிலில் வேளாங்கண்ணி செல்ல வாய்ப்பு கிடைத்தாலும் பெரும்பாலானோர் இந்த ரயிலை பயன்படுத்த முடியவில்லை.

இந்த ரயில் செங்கோட்டை வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக காலை 7:00 மணிக்கு செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல 15 நிமிட இடை வெளியில் அடுத்தடுத்து 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயிலை தென் மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தாத சூழல் உள்ளது. எனவே இந்த ரயில் எர்ணாகுளத்தில் இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் அதிகாலை 4:00 மணி, மதுரைக்கு காலை 7:30 மணிக்கு வந்து மதியம் 1:00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மறுமார்க்கத்தில் இரவு 10:00 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு மதுரை, காலை 8:30 மணிக்கு செங்கோட்டை வரும் வகையில் இயக்கினால் தென் மாவட்ட மக்கள் பலன் பெறுவர். இதற்கு தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source link