ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்குள் நேற்று காலை புகுந்த நபர், ‘எனக்கு எதிராக தீர்ப்பு சொல்வதா?’ என, ஆவேசமாக கேள்வி எழுப்பி, நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் செங்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 36; இன்ஜினியரிங் படித்துள்ள இவர், தற்போது விவசாயம் செய்து வருகிறார். திருமணமாகி, ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவி தங்க முனீஸ்வரி இவரை பிரிந்து சென்றுவிட்டார்.
அவரது வாழ்க்கை பராமரிப்பு செலவு தொகை கோரி, ஸ்ரீவில்லிபுத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் தங்க முனீஸ்வரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, கூடுதல் பொறுப்பு வகிக்கும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் விசாரிக்கிறார். வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படஉள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 14 நீதிமன்றங்கள் உள்ளன.
நீதிமன்ற சுவரை ஒட்டியுள்ள கண்மாயை கடந்து சென்றால், பாலமுருகன் வீடு உள்ளது. நேற்று காலை, தன் வீட்டில் இருந்து கண்மாய் வழியாக நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதிக்கு பாலமுருகன் வந்துள்ளார்.
அங்கு மர நாற்காலி ஒன்றை போட்டு, சுற்றுச்சுவர் ஏறி குதித்து காலை, 11:30 மணிக்கு, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்குள் வந்துள்ளார்.
நீதிமன்ற அறையின் கிழக்கு பக்க வாசலில் நின்ற பாலமுருகன், தான் கொண்டு வந்த பையில் இருந்து, 2 அடி நீளத்தில் ஒரு அரிவாளை எடுத்து, ‘என் ஊரிலேயே கோர்ட்டை நடத்திக் கொண்டு, எனக்கு எதிராக தீர்ப்பு சொல்வாயா?’ என, கூறிக்கொண்டே, நீதிபதி சுதாகரை நோக்கி அரிவாளை வீசினார். அது, வழக்கறிஞர்கள் மேஜையில் பட்டு, தரையில் விழுந்தது.
இதைப்பார்த்து, நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த போலீசார், அவரை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் ஏராளமான போலீசார் நீதிமன்றத்தில் குவிக்கப்பட்டனர்.
ஒரு மணி நேரம் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும், 12:30 மணிக்கு வழக்கம் போல் நீதிமன்றம் செயல்பட துவங்கியது.
சம்பவ இடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பார்வையிட்டு, நடந்தது குறித்து நீதிபதியிடமும், நீதிமன்ற ஊழியர்களிடமும் விசாரித்தார்.
எஸ்.பி., கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, முதன்மை மாவட்ட நீதிபதியு டன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.
நீதிமன்ற சிரஸ்தார் முருகையா புகாரில், பாலமுருகன் மீது நான்கு பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
