ஹவானா: அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளால், கியூபா தலைநகர் ஹவானாவில் குவியும் குப்பைகளால் சுகாதார

ஹவானா: அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளால், கியூபா தலைநகர் ஹவானாவில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான கியூபாவிற்கு, அதன் அண்டை நாடான வெனிசுலா, கச்சா எண்ணெய் வழங்கி வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையின் வாயிலாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, வெனிசுலா எண்ணெய் வளத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அமெரிக்கா, கியூபாவுக்கான எண்ணெய் வினியோகத்தை நிறுத்தியது. மேலும், கியூபாவுக்கு கச்சா எண்ணெய் அளிக்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து, கியூபாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஹவானாவில், 108 குப்பை லாரிகளில் தற்போது, 44 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. போதிய எரிபொருள் இல்லாததால் மற்றவை இயக்கப்படவில்லை.

இதனால், கியூபா தலைநகர் ஹவானாவில் குப்பை அள்ளப்படாமல், மலைபோல் குவிந்துள்ளன. இது, பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 1960ம் ஆண்டு முதல் கியூபா மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா., நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கியூபா மீதான தன் பிடியை அமெரிக்கா இறுக்கியுள்ளது. கியூபாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், கச்சா எண்ணெயை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உணவு, எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவி வரும் கியூபாவில், அத்தியாவசிய சேவைகளை பாதுகாக்க அந்நாட்டு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Source link