புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்தடைந்தன. இந்நிலையில் எரிவாயு ஏற்றப்பட்ட மேலும் 2 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழி யாகப் பயணிக்கின்றன. ஈரான் நாட்டின் ஒப்புதலுடன், அதன் கடற்கரைக்கு மிக நெருக்கமான பாதுகாப்பான பாதையை இக்கப்பல்கள் பின்பற்றுவதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
